சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயில் கமலம் நகரைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் பெங்களூருவில் உள்ள ரயில்வே துறைக்குச் சொந்தமான (BEML) பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்துவருகிறார்.
இந்நிலையில், சனி, ஞாயிறு விடுமுறைக்கு வந்த தட்சிணாமூர்த்தி குடும்பத்தோடு சேர்ந்து தி.நகர் கடை வீதிக்கு சென்று இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் பின்பக்கம் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து, உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 80 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து திருமுல்லைவாயில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.