சென்னை: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் மூலம் 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இயந்திரப் பொறியியல் துறையின் மூலம் வெளிநாட்டிலிருந்து வாங்கிய அதிநவீன இயந்திரங்களான நீர் மற்றும் நிலத்தில் இயங்கும் ஆம்பிபியன் இயந்திரங்கள், ரொபோடிக் எக்ஸ்கவேட்டர் இயந்திரங்கள் உதவியுடன் நீர்நிலைகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
பருவமழைக்கு முன்னதாக அகற்றம்
பருவமழை காலத்திற்கு முன்னதாக நீர்வழிக் கால்வாய்களில் இந்த இயந்திரங்கள் கொண்டு ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு, வண்டல்கள் தூர்வாரப்பட்டு தண்ணீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
7716 மெட்ரிக் டன் ஆகாயத் தாமரைகள் அகற்றம்
பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 30 நீர்வழிக் கால்வாய்களில் இரண்டு நவீன ஆம்பிபியன், மூன்று சிறிய ஆம்பிபியன், நான்கு ரொபோடிக் எக்ஸ்கவேட்டர் இயந்திரங்கள் கொண்டு ஜூன் மாதம் முதல் நேற்று வரை 7716 மெட்ரிக் டன் வண்டல்கள் மற்றும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு அகற்றப்பட்ட ஆகாயத்தாமரைகள், வண்டல்கள் டிப்பர் லாரிகள், ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் கொடுங்கையூர், பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: காவிரி மேலாண்மை வாரிய போராட்ட வழக்கு: முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட எழுவர் விடுவிப்பு