சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சராசரியாக 5 ஆயிரம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக வகைபடுத்தப்படுகின்றன.
இதில் மக்கும் குப்பைகள் இயற்கை உரமாகவும், பிளாஸ்டிக், ரப்பர் போன்ற குறிப்பிட்ட அளவு மக்காத குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மீதமுள்ள குப்பைகள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்தநிலையில், அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பைகள் கரை ஒதுங்கியது. இதையடுத்து, சென்னை மாநகராட்சியின் ஒப்பந்ததாரரான உர்பசேர் சுமீத் நிறுவனம் மூலம் பெசன்ட் நகர் கடற்கரையைச் சுத்தம் செய்யத் திட்டமிடப்பட்டு நேற்று (டிச.11) வரை 270 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டன.
ஒரே நாளில் 75 டன் திடக்கழிவுகள் அகற்றம்
மேலும் இன்று (டிச.12) பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், அப்பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் சென்னையில் உள்ள பல்வேறு மண்டலங்களைச் சேர்ந்த குடியிருப்போர் நலச் சங்கங்களுடன் இணைந்து தீவிர தூய்மைப் பணி நடைபெற்றது. இதில் மூன்றாயிரம் பேர் கலந்துக்கொண்டு அவர்கள் மூலம் 75 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டது.
கடற்கரையில் இருந்து அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்த மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், துணை ஆணையாளர் (சுகாதாரம்) மனிஷ், தெற்கு வட்டார துணை ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், உர்பசேர் சுமீத் நிறுவனத்தின் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: "மக்கள் நீதிமன்றம்" மூலம் ரூ.388.30 கோடி மதிப்பில் நிலுவையிலிருந்த வழக்குகளுக்கு தீர்வு