திருமண நிதியுதவித் திட்டம்
சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை சார்பில் 2020-2021ஆம் நிதியாண்டிற்கு திருமண நிதியுதவித் திட்டத்திற்காக 95 ஆயிரத்து 739 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 726 கோடியே 31 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கிடும்விதமாக, ஏழு பேருக்கு தங்க நாணயங்களையும், திருமண நிதியுதவித் தொகையையும் வழங்கி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
தையற் கூட்டுறவுச் சங்கம்
சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் 2020-21ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், மூன்றாம் பாலினத்தவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும்வகையிலும், மூன்றாம் பாலின உறுப்பினர்கள் கொண்ட தையற் கூட்டுறவுச் சங்கம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 100 மூன்றாம் பாலினத்தவரைக் கொண்டு 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மூன்றாம் பாலினத்தவர் தையற் கூட்டுறவுச் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றாம் பாலினத்தவர் தையற் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் நான்கு பேருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கினார்.
கைப்பேசி செயலி
மேலும், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் 2019-2020ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், மூன்றாம் பாலினத்தவர், அரசின் நலத் திட்டங்களைப் பயன்படுத்தி சமூகப் பொருளாதார மேம்பாடு அடையும் வகையில் 10 லட்சம் ரூபாய் செலவில் கைப்பேசி செயலி ஒன்று உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மூன்றாம் பாலினத்தவர் தங்களது தனிப்பட்ட விவரங்களைப் பிறர் அறிந்திடாத வண்ணம் தாமாகவே முன்வந்து பதிவுசெய்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேகமான கைப்பேசி செயலியை எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
2018-2019, 2019-2020ஆம் ஆண்டுகளில் சமூக நலத் துறைக்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு எட்டு நபர்களும், தட்டச்சர் பணியிடங்களுக்கு 37 நபர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
கருணை அடிப்படையில் பணி நியமனம்
அத்துடன், சமூகநலத் துறையில் பணியாற்றி பணியிடையே இறந்த ஊழியர்களின் 26 வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கிட தகுதிபெற்றுள்ளனர்.
இந்த 71 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, தமிழ்நாடு முதலமைச்சர் நான்கு நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதையும் படிங்க: உளுந்தூர்பேட்டையில் தீ விபத்து - மூன்று கூரை வீடுகள் தீயில் கருகி நாசம்!