தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு முதல்முறையாக அளிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கலந்தாய்வில் நவம்பர் 18ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரிகளில் 224 எம்பிபிஎஸ் இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் நான்கு இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஏழு இடங்களும் நிரம்பின. இவர்களுக்கான மொத்தமுள்ள 405 இடங்களில் 235 இடங்கள் நிரம்பின.
19ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் நாள் கலந்தாய்விற்கு 374 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 303 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர்.
அப்போது, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் காலியாக இருந்த மூன்று எம்பிபிஎஸ் இடங்களையும், தனியார் மருத்துவக் கல்லூரியில் காலியாக இருந்த 82 எம்பிபிஎஸ் இடங்களையும் மாணவர்கள் தேர்வு செய்தனர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கு நேற்று (நவ. 19) நடைபெற்ற கலந்தாய்வில் 123 பேர் இடங்களை தேர்வு செய்து ஒதுக்கீட்டு ஆணை பெற்றனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் காலியாக இருந்த 47 பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு இன்று (நவ. 20) நடைபெற்றது. அதில் 41 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்தனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆறு இடங்கள் காலியாக உள்ளன.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் ஆதி திராவிடர் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வின்போதே, கல்விக் கட்டணங்கள் வழங்கப்பட்டதால், அவர்களுக்குரிய ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பின.