சென்னை தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறிப்பாக பர்மா காலனி, திருநீர்மலை சாலை காட்டுப் பகுதியில் அதிகளவில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து போதைப் பழக்கத்திற்கு ஆளாவதாக தொடர் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து தாம்பரம் நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தாம்பரம் கூடுதல் ஆணையர் அசோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
போதைக்காக வலி நிவாரணி மாத்திரையைப் பயன்படுத்திவந்த கைப், பாலாஜி, அஜ்மீர் கான், கார்த்திக், விஷ்ணுபதி, கெளதம், குப்பை சரவணன் ஆகிய ஏழு பேரை கைதுசெய்து, அவர்களிடமிருந்த மாத்திரை அட்டைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், "குறைந்த விலையில் அதிகளவிலான வலி நிவாரணி மாத்திரைகளை கூடுவாஞ்சேரியில் ஒரு மருந்தகத்திலிருந்து வாங்கிவந்து பயன்படுத்துவோம். பல இளைஞர்களுக்கு விற்பனை செய்தோம்" என அவர்கள் கூறியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குப்பை சரவணன், கார்த்திக், விஷ்ணுபதி ஆகியோர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து அவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை சீரழித்து வருவது வேதனையளிப்பதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.