சென்னை: சர்வதேச அளவில் தங்கம் கடத்தும் கும்பல் ஒன்று சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில், பெருமளவு தங்கக் கட்டிகளை கடத்தி வருவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு, நேற்று இரவு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை தனிப்படை அதிகாரிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா(AIR INDIA) பயணிகள் விமானமும், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் அடுத்தடுத்து நேற்று இரவில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தன. சுங்கத்துறையின் தனிப்படை அதிகாரிகள் அந்த இரண்டு விமானங்களில் வந்த பயணிகளையும் தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த இரண்டு ஆண் பயணிகள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர். ஆனால் அந்த இரண்டு பயணிகளும் சுங்க அதிகாரியின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லாமல், சம்பந்தம் இல்லாமல் பேசினர். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அந்த இரண்டு பயணிகள் மீதும் சந்தேகம் வலுத்தது.
பின்னர் சம்பந்தப்பட்ட பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். செக்கின் லக்கேஜ்களில் எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் கையில் வைத்திருந்த கைப்பைகளில், தங்கக் கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்தனர். ஒவ்வொருவருடைய கைப்பையிலும் 34 தங்கக் கட்டிகள் வீதம், மொத்தம் இரண்டு பேருடைய கைப்பைகளிலும் 68 தங்க கட்டிகள் இருந்தன.
அவைகளின் மொத்த எடை 6.8 கிலோ. அந்தத் தங்க கட்டிகளின் சர்வதேச மதிப்பு ரூபாய் 3.32 கோடியாகும். இதையடுத்து சுங்க அதிகாரிகள் தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்து, கடத்தல் ஆசாமிகள் இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, இவர்கள் சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது.
இவர்கள் சென்னைக்கு யாருக்காக? இந்த தங்க கட்டிகளை கடத்தி வருகின்றனர். இவர்களிடம் இந்த தங்க கட்டிகளை வாங்க இருக்கும் சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் சென்னையில் யார் இருக்கிறார்கள்? என்று சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, நேற்று இரவு மலேசியாவில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், மலேசிய நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் பயணி, ஆடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.36.20 லட்சம் மதிப்புடைய 740 கிராம் தங்க நகைகளை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாள் இரவில் ரூ.3.68 கோடி மதிப்புடைய 7.54 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, இரண்டு சர்வதேச கடத்தல் ஆசாமிகள் மற்றும் மலேசிய பெண் பயணி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஹைடெக்காக மாறிய சென்னை ஏர்போர்ட்.. பயணிகளுக்கு புதிய வசதி அறிமுகம்!