சென்னை: சென்னை மாநகராட்சியின் 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். இதன் தொடர்ச்சியாக நிதிநிலை அறிக்கையை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த மாமன்ற கூட்டத்தில் வரி சலுகை, மழைநீர் வடிகால், சாலை சீரமைப்பு, செல்போன் கோபுரங்கள் வரன்முறை, சாலை பெயர் மாற்றம் உள்ளிட்ட 66 தீர்மானங்கள் என நிறைவேற்றப்பட்டது.
இதில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்:
- சென்னையில் புதிதாக செல்போன் கோபுரம் அமைக்கவும், ஏற்கனவே அமைக்கப்பட்ட செல்போன் கோபுரங்களை வரன்முறை செய்து அதன் மீது வரி வசூலிக்க வரன்முறை செய்யப்படும்.
- சென்னை மாநகராட்சியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக 44 ஆயிரத்து 436 சொத்துடமை தாரர்கள் 245 கோடி ரூபாய் வரி நிலுவையில் வைத்துள்ளனர். இதில் பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால், மாநகராட்சிக்கு வரி நிலுவைத்தொகை ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, ஒருமுறை சிறப்பு நிகழ்வாக, 5 ஆண்டுகளுக்கு மேலாக சொத்து வரி நிலுவைத் வைத்துள்ளவர்கள் 3 மாத காலத்திற்கு நிலுவைத்தொகை செலுத்தினால் 20% வரை வரி சலுகை வழங்க வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் அரசு அரசாணை வெளியிட வேண்டும்.
- தமிழ்நாடு அரசால் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, இணையவழியில் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் வசதியினை சென்னை மாநகராட்சியில் நீக்கப்படும்.
- சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை அளவீடு செய்து கணக்கிட்டுக் கண்காணிக்கத் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்படும்.
- எழும்பூர் மருத்துவமனையில் 5.89 கோடி ரூபாய் மதிப்பில் இன்குபேட்டரில் குழந்தைகள் வைக்கப்பட்டுள்ள போது, தாய்மார்கள் காத்திருக்கும் அறை, உணவு விடுதி உள்ளிட்ட பல்நோக்கு கூடம் கட்ட அனுமதி வேண்டும்.
- சென்னை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் புதிதாக மழைநீர் வடிகால் கட்டுவதற்கும், பழைய மழைநீர் வடிகால் கால்வாய்களை இடித்து புதிதாக கட்டப்பட உள்ளது.
- மண்டலம் 1 முதல் 8 வரை தினமும் சேகரிக்கப்படும் 50 டன் குப்பைகளை மணலி குப்பை கிடங்கில், காற்று புகும் வகையில் பதனம் செய்து உரம் தயாரிக்கும் நிலையத்தை, ஒரு வருடத்திற்கு செயல்படுதல் மற்றும் பராமரித்தல் பணி வழங்கப்படுகிறது.
- சென்னை மாநகராட்சி பராமரிக்கும் பல்வேறு பேருந்து செல்லும் சாலைகளைச் சீரமைக்கும் பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்படும்.
- வேலங்காடு மயானத்தில் அரசு தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ் உயிரிழந்தோர் உடலை வைத்திருக்கப் பிணவறை அமைக்கும் திட்டம்.
- சென்னை மந்தைவெளி மேற்கு வட்ட சாலைக்கு பழம்பெரும் புகழ்பெற்ற பாடகர் டி.எம்.சௌந்தராஜன் பெயர் சூட்டப்பட்டதற்குப் பின் ஏற்பு அனுமதி கோரியும், மெரினா கடற்கரை காமராஜர் சாலையையும் அண்ணா சாலையையும் இணைக்கும் முக்கிய சாலையான 'அவ்வை சண்முகம் சாலை'யினை மெரினாவிலிருந்து ராயப்பேட்டை உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரை பகுதியாக 'வி.பி.ராமன் சாலை' எனப் பெயர் மாற்றம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களை மாநகராட்சி மேயர் பிரியா மாமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையினை ஏற்று தீர்மானம் நிறைவேற்றினார்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் சைபர் க்ரைம்.. பெண்கள் உஷார்.. டிஜிபி கூறிய அறிவுரை என்ன?