சென்னையில் நிவர் புயல் காரணமாக கடந்த மூன்று நாள்களாகப் பலத்த காற்றுடன்கூடிய கனமழை பெய்துவருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் மழைநீரானது தேங்கி காணப்படுகிறது.
இந்நிலையில் பாரிமுனை ராசாப்ப செட்டி தெருவில் அமைந்துள்ள 63 ஆண்டுகள் பழமைவாய்ந்த நான்கு மாடி கட்டடம் ஒன்று, கனமழையால் பழுதடைந்து விழும் நிலையில் உள்ளது. இந்தக் கட்டடத்தின் மூன்றாவது மாடியில் பொருத்தப்பட்டிருந்த கடையின் விளம்பரப் பலகை ஒன்று திடீரென உடைந்து கீழே விழுந்துள்ளது.
இதனால் அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக மாநகராட்சி, காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த பூக்கடை காவல் துறையினர் பொதுமக்கள் ஒருவரும் தெருவில் உள்ளே நுழையாதபடி தடுப்பை அமைத்துள்ளனர். மாநகராட்சித் துறையினர் இந்தக் கட்டடத்தை இடிப்பது குறித்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறுகையில், இதேபோல் சென்னை முழுவதும் சுமார் 130-க்கும் மேற்பட்ட பழமைவாய்ந்த கட்டடங்கள் உள்ளதாகவும், அவற்றை இடிப்பதற்கான நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றக் கோரி கோரிக்கை