எழும்பூரில் உள்ள அரசு பள்ளியில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் ஒட்டும் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசுகையில், “வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. சரி பார்த்த பிறகு, இவை பாதுகாப்பு அறையில் வைக்கப்படும்.
பின்னர், தேர்தலின் போது மீண்டும் எடுத்து பயன்படுத்தப்படும். இவை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படும். மேலும், 5ஆம் தேதி தொகுதியில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு மையத்திற்கும் அனுப்பிவைக்கப்படும். அதுமட்டுமல்லாமல், சென்னையில் இதுவரை ரூ.48 கோடி மதிப்புள்ள பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து 144 கண்காணிப்புக்குழு தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் இருக்கும் தேர்தல் நடத்துபவர் காவல் துறையினர் அனைவருடன் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அதில் 607 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனத் தெரியவந்துள்ளது.
அங்கு மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளோம். மேலும், சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதை மீறி எதுவும் நடைபெறாது. வேட்பாளர் அதிகமாக இருக்கும் இடத்தில் அதிக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும்.
குறைவாக தியாகராய நகரில் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கு ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்று மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கொளத்தூரில் 36 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கு மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், காவல் துறையினரின் தபால் வாக்கு சேகரிப்புப் பணி 55 விழுக்காடு நிறைவடைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’சிகரம் அடைவதற்கான ஆக்ஸிஜன் இந்த விருது’ - ரஜினிக்கு வைரமுத்து வாழ்த்து