விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கூலித் தொழில் செய்துவருகிறார். ரமேஷ் தனது மனைவி சத்யா, மூன்று மாத குழந்தை சஞ்சனா ஆகியோருடன் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் தங்கிப் பணிபுரிந்துவருகிறார்.
கடந்த நவம்பர் மாதம் 9ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைக் காணாமல்போனது. இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ், சத்யா தம்பதி இது குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, அன்று இரவு 9 மணி அளவில் குழந்தை அம்பத்தூர் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், குழந்தையைக் கடத்தியதாக இரண்டு சிறார்கள் உள்பட ஆறு பேரைக் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செங்குட்டுவன் என்பவர் தான் இந்தக் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது. அண்ணா நகரைச் சேர்ந்த உணவு விடுதி நடத்திவரும் அபிநயா - கார்த்திக் தம்பதிக்கு கடந்த எட்டு வருடமாக குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது.
அவர்கள் நடத்திவரும் உணவு விடுதியிலேயே செங்குட்டுவன் பரோட்டா மாஸ்டராகப் பணிபுரிந்துவந்துள்ளார். செங்குட்டுவன் தங்களிடம் அழகான பெண் குழந்தை இருக்கிறது. அதற்கு பத்து லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் குழந்தை கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதற்கு அபிநயா கார்த்திக் தம்பதி சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அதன்பின்னர் செங்குட்டுவன், கணேஷ் என்பவரைத் தொடர்புகொண்டு கோயம்பேடு மார்க்கெட் பகுதியிலிருந்து வரும் பாபு- காயத்திரி தம்பதியிடம் இது குறித்து கேட்டுள்ளனர். பாபு காயத்ரி, அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய மூவரும் திட்டமிட்டு சத்யாவின் மூன்று மாத கைக்குழந்தையைத் திருடி, ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளனர்.
பின்னர் குழந்தையைப் புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் மூலமாக அபிநயா கார்த்திக் தம்பதிக்கு அனுப்பியுள்ளனர். குழந்தையைப் பார்த்ததும் ஆச்சர்யமடைந்த அபிநயா குழந்தையைச் சட்டப்பூர்வமாகத் தத்தெடுத்துக் கொள்ள விரும்புவதாகவும் குழந்தையின் பெற்றோருடைய ஆதார் கார்டு குறித்த விவரங்களைக் கேட்டுள்ளனர். இதனைச் சற்றும் எதிர்பாராத கடத்தல் கும்பல் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் குழந்தை கடத்தப்பட்டது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதாலும் கடத்தல் கும்பல் பயந்துள்ளனர். காவல் துறையிடமிருந்து தப்பிப்பதற்காக அம்பத்தூர் பகுதியில் குழந்தையை விட்டுவிட்டு அவர்களே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு குழந்தை ஒன்று அனாதையாக கிடப்பதாக கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல் துறையினர் குழந்தையை மீட்டனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கோயம்பேடு காவல் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்துவந்தனர். அதில், குழந்தையை விட்டுச்செல்பவர் கோயம்பேட்டைச் சேர்ந்த கணேஷ் என்பதை உறுதிசெய்து அவரைக் கைதுசெய்தனர்.
மேலும் இச்சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட செங்குட்டுவன், உடந்தையாக இருந்த கோயம்பேட்டைச் சேர்ந்த பாபு, அவரது மனைவி காயத்ரி, மகன், 16 வயதுடைய சிறுவன் என ஆறு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: சென்னை: பணத்துக்காக குழந்தையை விற்க முயன்ற கும்பல் கைது!