சென்னை முகப்பேர் மேற்கு ஒன்றாவது பிளாக்கில் வசித்துவருபவர் ராஜேஸ்வரி. இவருக்கு நண்பர் ஒருவர் மூலம் நில புரோக்கர் புருஷோத்தமன், ராஜேஷ் ஆகியோர் அறிமுகமாகினர். இருவரும் சேர்ந்து முகப்பேர் பகுதியில் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜம் என்பவருக்குச் சொந்தமான 640 சதுரஅடி காலி நிலம் விற்பனைக்கு உள்ளதாக ராஜேஸ்வரியிடம் தெரிவித்தனர்.
அது தொடர்பான நகல் ஆவணங்களை ராஜேஸ்வரியிடம் காண்பித்து அதன் விலை 48 லட்சம் ரூபாய் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், புருஷோத்தமன், ராஜேஷ் ஆகிய இருவரும், நில உரிமையாளர் ராஜம் என்ற பெயரில் போலியான பெண் ஒருவரையும், சில நண்பர்களையும் அழைத்துக்கொண்டு, ராஜேஸ்வரியிடம் கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் தேதியன்று 10 லட்சம் ரூபாயும், 28ஆம் தேதியன்று 5 லட்சம் ரூபாயும் என மொத்தம் 15 லட்சம் ரூபாய் ராஜேஷ்வரியிடம் வாங்கியுள்ளனர்.
இந்நிலையில், ராஜேஸ்வரி, தான் வாங்கிய நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக நேற்று ( அக்.2 ) அம்பத்தூர் பத்திர பதிவு அலுவலகத்திற்குச் சென்றார். ஆவணங்களை சரிபார்த்த பத்திரப்பதிவு அலுவலர், அந்த ஆவணங்கள் போலியானது என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி, தான் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்த காவல் துறையினர், மோசடியில் ஈடுபட்ட நொளம்பூரைச் சேர்ந்த நில புரோக்கர் புருஷோத்தமன், மணலி நியூ காலனியைச் சேர்ந்த ராஜேஷ், சுவாமி நாதன், கும்பகோணம் நில உரிமையாளர் ராஜம் போல நடித்த தண்டையார்பேட்டையைச் சேர்ந்த திலகா, ஹேமலதா, கொளத்துார் பிரபாமாகாளி ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்.
கைதானவர்களின் போலி ஆவணங்களுடன் வீட்டை பார்க்க வந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும், போலி ஆவணங்களையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். கைதான ஆறு பேர் மீது கூட்டு சதி, மோசடி, போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், அவர்களை சென்னை சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள இரண்டு பேரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கழிவறை கட்டிய ரசீது இருக்கு; ஆனால் கழிவறையைக் காணோம்!