சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் ரதி (51). வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த இவர் அப்பகுதியில் உள்ள மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனாலும் உடல் நிலை சரியில்லாததால் சென்னை எழும்பூர் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனைக்கு சிகிச்சைப் பெறுவதற்காக சென்றார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சினைப்பையில் கட்டி உள்ளதைக் கண்டறிந்தனர்.
இதனையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது, வயிற்றிலிருந்த 20 கிலோ கட்டியை அகற்றியுள்ளனர். தற்போது நோயாளி ரதி நலமாக உள்ளார்.
இதுகுறித்து எழும்பூர் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனை இயக்குனர், கண்காணிப்பாளர் சம்பத்குமாரி, அறுவை சிகிச்சை பேராசிரியர் சீதாலட்சுமி கூறுகையில், "51 வயது பெண்மணி ரதிக்கு, சினைப்பையில் இருந்த கட்டியை அகற்றுவதற்கான அறுவைசிகிச்சை மேற்கொண்டோம். இந்தக் கட்டி புற்றுநோய் கட்டி என்பதையும் உறுதி செய்தோம்.
இருந்தாலும், இந்தக் கட்டி உடையாமல், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் பாதிக்காத வகையில் அறுவை சிகிச்சை மேற்கொள்வது சற்று கடினமாகவே இருந்தது. காரணம் புற்றுநோய் கட்டி உடைந்தால் வேறு பகுதிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது. அறுவை சிகிச்சைக்கு முன்னர் 55 கிலோ எடை இருந்தது தற்போது 35 கிலோ எடையுடன் அவர் நலமாக உள்ளார்.
பெரும்பாலும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு சினைப்பையில் கட்டி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அவர்கள் தங்களை பரிசோதித்துக் கொள்வது பாதுகாப்பாக அமையும்.
45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கட்டி ஏற்பட்டு புற்றுநோய் போன்றவை வராமல் இருக்க பெண்கள் தங்களை பரிசோதிக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிளாஸ்டிக்கை செங்கற்களாக உருமாற்றும் ஹிமாச்சல் மக்கள்!