சென்னை விமான நிலையத்தில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - சென்னை விமான நிலையம்
சென்னை: விமான நிலையத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ தங்கத்தைச் சுங்க இலாகா அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
![சென்னை விமான நிலையத்தில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் gold seized at Chennai airport](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10536907-thumbnail-3x2-gold.jpg?imwidth=3840)
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயிலிருந்து சிறப்பு விமானம் இன்று(பிப் 7) அதிகாலை வந்தது. அந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்திவரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் விமான நிலைய சுங்க இலாகா அலுவலர்கள், பயணிகளை சோதனையிட்டனர்.
அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்(38) என்ற பயணியை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து எடுத்துவந்த 400 கிராம் தங்க பேஸ்ட் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தங்கத்தைப் பறிமுதல் செய்த அலுவலர்கள் அபுபக்கா் சித்திக்கை கைது செய்தனர்.
மேலும், விமானத்தை சோதனை செய்ததில் இருக்கையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 600 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.50 லட்சமாகும். இந்நிலையில் தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்க இலாகா அலுவலர்கள் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.