சென்னை விமான நிலையத்துக்கு பெரும் அளவில் கடத்தல் பொருள்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, மலேசியாவிலிருந்து வந்த சென்னையைச் சேர்ந்த ஜும்மாகான்(44) என்பவரை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவருடையை உடமைகளை சோதனை செய்தனர்.
அதில், ஆடைகளுக்கிடையில் தங்கச் சங்கிலியையும், மடிக்கணினிகளில் தங்க மோதிரங்களையும் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடமிருந்த 12 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 303 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதேபோல், கொழும்பிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த விஜயா(57) என்ற பெண் தனது உள்ளாடைக்குள் மறைத்துவைத்திருந்த 8 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 230 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. மேலும், துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த உசேன்(37) மறைத்து வைத்திருந்த 20 லட்சம் மதிப்புள்ள 476 கிராம் தங்கத்தை கைப்பற்றப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இன்று ஒருநாள் மட்டும் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரிடமிருந்து 50 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'வறுமையில்லாத நாட்டை உருவாக்க இதுதான் வழி' - பொருளியல் பேராசிரியர் ரங்கா ரெட்டியின் கருத்து