கர்நாடகா மாநிலத்தில் கன்னட மொழியில் பள்ளி படிப்பை முடித்தவர்களுக்கு மருத்துவ படிப்பில் 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதைப்போல, தமிழ்நாட்டில் தமிழ் வழியில் பள்ளிப்படிப்பை முடித்தவர்களுக்கும் 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், தமிழ்நாட்டில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் ஐந்தாயிரத்து 400 மாணவர்கள் சேர்க்கப்படும் நிலையில், 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி படித்தவர்கள் பெரும்பாலும் 5 விழுக்காட்டுக்கும் குறைவாகவே சேர்க்கப்பட்டுள்ளனர். 2018ஆம் ஆண்டு, தமிழ் வழியில் பள்ளிப்படிப்பை முடித்த 106 மாணவர்கள் மட்டுமே, மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அனுப்பிய விண்ணப்பத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
இது, மாணவர்களை தமிழ் வழி படிப்பிலிருந்து ஆங்கில வழிக் கல்விக்கு மாற்றுவதுடன், தமிழ், ஆங்கில வழிக் கல்வியில் படித்தவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும். நீட் நுழைவுத் தேர்வில், தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்கள் மொழிச் சிறுபான்மையினர் என்பதால், அந்த மாணவர்களின் நம்பிக்கையையும் நலனையும் பாதுகாக்க வேண்டும். இது தொடர்பாக, நவம்பர் 2, டிசம்பர் 11 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோருக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பவில்லை என அந்த மனுவில் குற்றஞ்சாட்டினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் இதுகுறித்து பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, மருத்துவக் கல்வி இயக்குனரகம் ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது.
இதையும் படிங்க: மத்திய சுகாதாரத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!