சென்னை: அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மகாதேவ் பிரசாத். இவர் டிரேடிங் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மகாதேவ் பிரசாத் மற்றும் அவரது மனைவி வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் மகாதேவ் பிரசாத்தின் தாயார் மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார்.
அப்போது வீடு புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கட்டி போட்டு வீட்டில் இருந்த 40 சவரன் நகை மற்றும் 83 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து உள்ளனர். மேலும் மூதாட்டியை நிர்வாணப்படுத்தி செல்போனில் வீடியோ எடுத்து வெளியே சொன்னால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது
பின்னர் வீட்டிற்கு வந்த மகாதேவ் பிரசாத் அவரது தாயை மீட்டு இது குறித்து, அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தடயங்களை சேகரித்து சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். வீடு புகுந்த மூதாட்டியை கட்டி போட்டு நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்து அரும்பாக்கம் போலீசார் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் மணிகண்டன் என்பவர் மூதாட்டியின் மகன் மகாதேவ் பிரசாத் நடத்தி வரும் மோகா எக்ஸ்போர்ட் என்ற டிரேடிங் கம்பெனியில் பணியாற்றி வந்ததும், கடந்த 7 மாத காலமாக அவருக்கு சம்பளம் முறையாக கொடுக்காததால், நண்பர்களுடன் சேர்ந்து மகாதேவ் மற்றும் அவரது மனைவி ஆகியோரிடம் பணம் பறிக்க மணிகண்டன் திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது.
அதற்காக நேற்று முன்தினம் அரும்பாக்கம் வந்த 5 பேரும் மதுபான கடையில் மது அருந்தியுள்ளனர். மணிகண்டன் வீட்டை காட்டி விட்டு வீட்டில் மறைந்து கொள்ளுங்கள் கடைக்கு சென்று இருவரும் வரும் நேரத்தில், வீட்டினுள் வைத்து அவர்களிடம் பணத்தை பறித்து விடலாம் என திட்டம் தீட்டியுள்ளனர்.
ஆனால் மதுபோதையில், உள்ளே சென்ற நான்கு பேரும் மூதாட்டியை தாக்கி கட்டிப் போட்டு வீட்டினுள் இருந்த பீரோவில் உள்ள நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் கொள்ளை அடிக்கப்பட்டதில் 8 சவரன் மட்டுமே தங்க நகைகள் என்றும், மீதி நகைகள் அனைத்தும் கவரிங் நகைகள் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்தில் மணிகண்டன், துரைசிங்கம், ரமேஷ், துரைபாண்டியண், மணிகண்டன் ஆகிய 5 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பைக்கில் சென்ற பெண்ணின் தாலி பறிப்பு.. முன்னாள் ராணுவ வீரர் கைது!