மத்திய அரசின் கட்டாயக் கல்விச் சட்டத்தின் விதியினை பின்பற்றி ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை தமிழ்நாட்டில் இந்தக் கல்வியாண்டு முதலே அமலாகும் என அறிவிப்புகள் வெளியாகின. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, 'மூன்றாண்டு காலத்திற்கு மாணவர்களை தோல்வி அடையச்செய்யும் முறையிலிருந்து விலக்கு பெறப்படும்.
அவ்வாறு தேர்வு நடத்தப்பட்டாலும் தற்போதுள்ள நடைமுறைப்படியே கல்வித்திட்டம் செயல்படுத்தப்படும்' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஐந்து, எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வும் நடத்தப்படாது. பொதுத்தேர்வு நடைபெறாத பட்சத்தில் மாணவர்கள் தோல்வி அடையச் செய்யப்படவும் வாய்ப்பில்லை என்று கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும், மாணவர்களுக்கு தற்பொழுது முப்பருவக் கல்வி முறை செயல்பாட்டில் உள்ளது. எனவே இந்தப் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தினால், முப்பருவக்கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.