சென்னை: தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ், போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து ஒளிரும் பட்டை விவகாரத்தில் முறைகேடு நடைபெறுகிறது எனவும், ஆன்லைனில் வழக்கு போடுவதை தடுக்க வேண்டி வருகிற ஜூன் 6ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என மனுவை வழங்கினார்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ், தமிழ்நாட்டில் பொது போக்குவரத்து வாகனங்கள் 13 லட்சம் உள்ளது. ஒவ்வொரு வாகனமும் ஆண்டு தோறும் பிட்னஸ் சர்டிபிகேட் வாங்க ஆர்டிஓ அலுவலகம் வர வேண்டும். பிட்னஸ் சர்டிபிகேட் வாங்க வரும்போது ஒவ்வொரு வாகனமும் ஒளிரும் பட்டை ரெஃப்ளெக்டட் ஸ்டிக்கர் ஒட்டி வந்தால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த ஒளிரும் பட்டைகளின் மதிப்பு சுமார் 200 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1200 ரூபாய் தான் வரும். ஆனால் தற்போதுள்ள அரசு ஒரு ஆணை வெளியிட்டு, 13 ஒளிரும் பட்டை விற்கும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி அதில் 2 நிறுவனங்களுக்கு ஆர்டிஓ அலுவலகத்தின் அருகில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை ஸ்டிக்கர் 4200 முதல் 4800ரூ வரை வசூல் செய்கிறார்கள். மேலும் ஒரு ஸ்டிக்கருக்கு 2800 முதல் 3000 வரை அதிகமாக வசூல் செய்கிறார்கள். இவ்வாறு 13 லட்சம் வாகனங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை வசூல் செய்தால் 4680 கோடி ஏஜென்ட்களை வைத்து வசூல் செய்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.
இது மட்டுமில்லாமல் காவல்துறையினர், ஓவர் லோடு என்ற பெயரில், 4.50 லட்சம் வாகனத்தில் ஒன்றரை லட்சம் வாகனத்திற்கு 5000 ரூபாய் மாதத்திற்கு வசூல் என மாதத்திற்கு 750 கோடி வசூல் செய்கிறார்கள். மாநில எல்லையில் உள்ள செக் போஸ்ட் அகற்ற வேண்டும் என ஒன்றிய அமைச்சர் உத்தரவு வழங்கிய நிலையில், பீகார், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் செக்போஸ்ட் அகற்றிய நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் செக்போஸ்ட் அகற்றப்படாமல் அதன் மூலம் வசூல் செய்கிறார்கள். மேலும் ஒரு செக்போஸ்டில் உள்ள காவலர் 4 கோடி டார்கெட் உள்ளது என தெரிவித்ததாக கூறினார்.
மேலும் ஒவ்வொரு முறை ஒரு லாரி வர வேண்டும் என்றால் ஆயிரம் ரூபாய் தர வேண்டும். கடந்த ஆட்சியில் ரூ 300 ஆக இருந்த நிலையில் தற்போது ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இதே போல் 21 செக் போஸ்டிலும் வசூல் செய்யப்படுகிறது. மேலும் காவல்துறையினர் மாமுல், ஆன்லைன் உள்ளிட்டவை மூலம் எங்களிடம் பணம் வசூல் செய்கின்றனர் என குற்றம் சாட்டினர்.
மேலும் இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும் என ஒன்றரை ஆண்டுகளாக போக்குவரத்து ஆணையரிடம் கூறி வருகிறோம். அதற்கு போக்குவரத்து ஆணையர் ஊழல் எல்லாம் தடுக்கவே முடியாது என தெரிவித்தார். மேலும் சில குற்றச்சாட்டுகளை ஆதாரத்தோடு வைத்த போதிலும் அவர் அதனை தடுக்காமல், அதற்கு ஆதரவு தருகிறார். எனவே போக்குவரத்து ஆணையர் மீதும் அமைச்சரிடம் புகார் வழங்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் அபராதத்தை எதிர்த்தும், சுங்க கட்டணத்தை எதிர்த்தும் வருகின்ற ஜூன் 6ஆம் தேதி ராஜரத்னம் ஸ்டேடியம் அருகே லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வரும் ஜூன் 13 முதல் 17 வரை சென்னையில் உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி!