சென்னை: கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு செப்படம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இயங்கி வந்துள்ளது.
இந்நிறுவனத்தின் இயக்குனர்களாக வேலூரை சேர்ந்த லெட்சுமி நாராயணன் சுந்தரம், சுந்தரம் வேதநாரயணன், சுந்தரம் பக்தவச்சலம், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கஜேந்திரன், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவேக் ஆகியோர் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள்
- Marc opportunity Development Ltd., Katpadi, Vellore
- Comtantius Corporate Business Services, Mylapore, Chennai
- Accordience Business Service, Katpadi, Vellore
- Arles Maxent Associates, Olympia Tower, Chennai
என்ற நிறுவனங்களை ஆரம்பித்து பொதுமக்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று வந்துள்ளனர். இந்த நிறுவனங்கள் பொதுமக்களிடம் பெறப்படும் முதலீடுகளுக்கு மாதவட்டியாக 6 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்நிறுவன இயக்குநர் லெட்சுமி நாராயண சுந்தரம் என்பவர் பங்குச் சந்தையில் வல்லுநர் எனவும். எனவே பொதுமக்களிடம் பெறப்படும் பணம் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டு அதிக வருமானம் ஈட்டப்படும் என்றும். மேலும் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் நிலங்களில் முதலீடுகள் செய்து வருமானம் ஈட்டப்படும் என்ற வாக்குறுதிகளைக் கூறியுள்ளனர்.
பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெறுவதற்காக இந்நிறுவனங்கள் முகவர்களையும் பணியாளர்களையும் நியமித்து, பல்வேறு ஊர்களில் உள்ள ஆடம்பர நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டங்கள் நடத்தி, அதில் பொதுமக்களைக் கவரும் வகையில் ஆசை வார்த்தைகளைக் கூறிப் பேசியுள்ளார்கள்.
ஆனால் எந்தவொரு முதலீட்டுத் திட்டமும் இல்லாமல் இந்நிறுவனங்களில் முதலாவதாக முதலீடு செய்தவர்களின் பணத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கே மாதவட்டியைக் கொடுத்துள்ளனர். பிறகு அடுத்தபடியாக முதலீடு செய்யும் பொதுமக்கள் பணத்தைப் பயன்படுத்தி முந்தைய முதலீடு செய்தவர்களுக்கு வட்டியை வழங்கியுள்ளனர். இது "PONZI Scheme" எனக் கூறப்படும் வகையைப் போலாகும். ஆனால், அதன் முதலீட்டாளர்களுக்கு மாத வட்டியையும் மற்றும் முதலீட்டுத் தொகைகளையும் முறையாக திரும்பத் தரவில்லை என கூறப்படுகிறது.
இதுசம்மந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் சென்னை பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் 16/2022.ச/பி 420, 120(B) IPC, 5 of TNPID Act, 1997 மற்றும் 3, 5, 21(1), 21(2), 21(3), 23 and 25 of Banning of Unregulated Deposit Schemes Act, 2019 ஆகிய பிரிவின் கீழ் 04.08.2022 அன்று வழக்கு பதிவுசெய்யப்பட்டு, சென்னை பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வந்தது.
இவ்வழக்கு விசாரணை சம்பந்தமாக நேற்று முந்தினம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் 2 இடங்களில் சம்பந்தப்பட்டவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றிலும் 06.06.2022 அன்று சென்னையில் ஒரு இடத்திலும் பொருளாதாரக் குற்றப் பிரிவுக் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், 247 ஆவணங்கள், 15 கணிணிகள், 66 மடிக்கணிணிகள் 1 லேப்டாப், 15 கைப்பேசிகள், 40 சவரன் தங்கம் 1 கார் மற்றும் ரொக்கம் சுமார் ரூ.1.05 கோடி கைப்பற்றப்பட்டது.
மேலும் விசாரணையில் சுமார் 79,000 பொதுமக்கள் இந்நிறுவனங்களில் முதலீடுகள் செய்துள்ளதும், அதன் மொத்தத் தொகை சுமார் ரூ.4,383,20,71,331 (நான்காயிரத்து முன்னூற்று எண்பத்து மூன்று கோடி) எனவும் தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து நேற்று (07.08.2022) சென்னை, அரக்கோணம் மற்றும் வேலூர் ஆகிய ஊர்களில் நான்கு இடங்களில், சம்மந்தப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
மேலும், தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில், முதலீடுகள் செய்தவர்களின் எண்ணிக்கையும், முதலீட்டுத் தொகையும் இன்னும் கூடுதலாக இருக்கலாம் எனவும் தெரிகிறது. இந்நிறுவனத்தின் மூலம் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் வழக்கின் விசாரணை அதிகாரியிடம் eowInsifscase@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கலாம்.
இதேபோல், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிதிநிறுவனம் பொதுமக்களிடம் பெறப்படும் முதலீடுகளுக்கு மாதவட்டியாக 18 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படும் என அறிவித்து ரூ.1,680 கோடியை முதலீடுகளாகப் பெற்றுள்ளது. இதில் சுமார் 89000 நபர்கள் தங்கள் பணத்தினை முதலீடுகள் செய்துள்ளனர்.
ஆனால், முதலீட்டாளர்களுக்கு மாதவட்டியையும். அசல் தொகையையும் திரும்பத் தராமல் மோசடி செய்துள்ளது. இது சம்மந்தமாக சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் 07/2022 ச/பி 420, 406 & 120(B) IPC r/w 3 & 5 of Banning of Unregulated Deposit Schemes Act, 2019 and 58(B) of RBI Act, 1934 என்ற பிரிவின் கீழ் 20.06.2022 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல்துறையினரால் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல், திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட Elpin-e-Com Ltd., எனும் நிதி நிறுவனம் மற்றும் அதனுடைய நிதி நிறுவனங்கள் ரூ.400 கோடிகளை பொதுமக்களிடமிருந்து முதலீடாகப் பெற்று முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளது. இந்நிறுவனங்களில் சுமார் 5,000 நபர்கள் தங்கள் பணத்தை முதலீடாகச் செய்துள்ளனர்.
இந்நிறுவனங்களின் மீது தொடரப்பட்ட 19 வழக்குகளையும் சென்னை பொருளாதாரக் குற்றப் பிரிவு தனி விசாரணைக் குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
இதுபோன்று அதிகவட்டி தருவதாகக் ஆசைவார்த்தைகளைக் கூறி பொதுமக்களை ஏமாற்றி வரும் நிதி நிறுவனங்களில், தங்களுடைய பணத்தினை முதலீடு செய்து ஏமாறவேண்டாம் எனவும், இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட அங்கீகாரம் பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தங்களின் கடின உழைப்பால் பெறப்பட்ட பணத்தினை முதலீடு செய்யுமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 281 சவரன் தங்கம், 30 கிலோ வெள்ளி கொள்ளை