சென்னையில் கரோனா வைரஸ் திருவிக நகர், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் அதிகமாக பரவி வருகிறது, இருப்பினும் குணமடைந்தவரின் விழுக்காடும் அதற்கு சரி சமமாக உள்ளது. இந்த நோய்த்தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் தினமும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது கபசுர குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தினமும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது .
மே 8ஆம் தேதி முதல் இன்றுவரை மாநகராட்சி சார்பில் மொத்தம் 72 ஆயிரத்து 135 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. அதில் 35 லட்சத்து 47ஆயிரத்து 37 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மக்கள் தொகையில் 30 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட நபர்கள் இந்த மருத்துவ முகாம்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இன்று 409 மருத்துவ முகாம்கள் நடைபெற்றது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 50, அண்ணா நகரில் 44 மருத்துவ முகாம் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற 409 மருத்துவ முகாம்களில் மொத்தம் 18 ஆயிரத்து 257 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் 432 நபர்கள் தொற்று அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள நபர்களுக்கு நோய் ஏற்ற மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.