சென்னை அபிராமபுரம் வள்ளீஸ்வரன் தோட்டம் பகுதியில் ஆட்டோவில் கஞ்சா கடத்திவருவதாக அபிராமபுரம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்த முயன்ற போது ஆட்டோ நிறுத்தாமல் வேகமாகச் சென்றது.
இதனையடுத்து, காவல் துறையினர் அந்த ஆட்டோவை துரத்தி சென்றனர். அப்போது பட்டினம்பாக்கம் சாலையர் தெரு அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு ஓட்டுநர் கூவம் ஆற்றில் குதித்து தப்பியோடினார். அங்குவந்த காவல் துறையினர் ஆட்டோவை பறிமுதல் செய்து கூவத்தில் குதித்து தப்பி ஓடிய ஆட்டோ ஓட்டுநரை தேடினர்.
ஆட்டோ ஓட்டுநர் கிடைக்காததால், பறிமுதல் செய்த ஆட்டோவில் சோதனை மேற்கொண்டபோது அதில் சுமார் 400கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், ஆட்டோவில் கஞ்சா கடத்திவந்த நபர் பார்த்திபன் என்பது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் காவல்பறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபனை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 'கைலாசாவில் விவசாயம் செய்ய அனுமதி தாருங்கள்' - நித்யானந்தாவிற்கு கோரிக்கை விடுத்த விவசாயி