சென்னை: தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட 40 அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் பற்றாக்குறை காரணமாக 40 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் கடந்த 15 ஆண்டுகளில் படிப்படியாக அரசுப்பள்ளிகள் மூடப்படுவது அதிகரித்து வருவதாகவும், 22 தொடக்கப்பள்ளிகளும், நடுநிலைப்பள்ளிகளும், 18 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. 669 தொடக்கப்பள்ளிகள் ஒற்றை இலக்க மாணவர் எண்ணிக்கையில் செயல்பட்டுவருகின்றன.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிக்காலத்திலும் அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. தனியார் பள்ளிகளின் மீதான ஆர்வம் அதிகரித்து, மாணவர்கள் அரசுப்பள்ளிகளிலிருந்து வெளியேறியுள்ளதன் காரணமாக இது இருக்கலாம். அரசுப் பள்ளிகளில் உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, மாணவர்கள் மதிப்பெண் குறைவாக பெறுவது, அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த ஆட்சியாளர்கள் உரிய கவனம் செலுத்தாதது, உள்ளிட்டப் பல்வேறு காரணிகள் அரசுப்பள்ளிகள் மூடப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, மாணவர் சேர்க்கை முற்றிலும் இல்லாதப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நடப்புக்கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு பள்ளி மேலாண்மைக்குழுக்கள் மூலமாக அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டுள்ளது.
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலம் மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை கட்டாயம் ஏற்படுத்த வேண்டுமென்றும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் திருவாரூர்-2, நாட்றம்பள்ளி -1, தேவகோட்டை- 4 , தட்டாலகொளத்தூர்-1, திருவள்ளூர்-1, பர்கூர்-1 , தாராபுரம்-1 , புள்ளம்பாடி-1 மயிலாடுதுறை-1, ஆரணி -1, கெலமங்கலம் -1 திண்டுக்கல் - 4, லால்குடி -2, தர்மபுரி-1 திருவண்ணாமலை-1, திருப்பூர்-5, வேலூர்-2 மேலும் அதிகப்பட்சமாக நீலகிரி மற்றும் தேனியில் தலா 5 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 12 ம் வகுப்பு துணைத் தேர்வு; நாளை முதல் ஹால் டிக்கெட்