சென்னை: குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (33). இவர் அக்டோபர் 15ஆம் தேதி இரவு, அருகில் உள்ள டீ கடைக்கு சென்று வருவதாக கூறிச் சென்று பின்னர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து சிலம்பரசனின் மனைவி குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினரும் புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் சிலம்பரசனை கொலை செய்து புதைத்து விட்டதாக, குன்றத்தூரைச் சேர்ந்த வருண் (18), விக்னேஷ் (21), பிரவீன்குமார் (21), கோவிந்தராஜ் (23) ஆகிய நான்கு பேர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
கஞ்சா விற்பனையை ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் தெரியப்படுத்தியதாலேயே இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் கொலை செய்த சிலம்பரசனின் உடலை நத்தம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் புதைத்து விட்டதாகவும் கொலையாளிகள் கூறியுள்ளனர்.
இதனால் தாசில்தார் முன்னிலையில் உடலை தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்யும் வேலையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். உடற்கூராய்வின் முடிவிலேயே சிலம்பரசன் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தெரிய வரும். இதனிடையே குற்றவாளிகளை விசாரணைக்கு அழைத்துச் செல்ல நீதிமன்ற அனுமதியை பெறும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மாணவி தூக்கிட்டு தற்கொலை - மொபைலில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் நேர்ந்த சோகம்