சென்னை: துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. வழக்கம் போல் விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது சென்னையை சேர்ந்த ஆண் பயணிகள் இருவரின் நடவடிக்கையில், சுங்கத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரிடமும் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.
இதையடுத்து அவர்களது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவர்கள் மறைத்து வைத்திருந்த தங்க செயின், தங்கப் பசை அடங்கிய பாக்கெட்டுகள் மற்றும் வெள்ளி முலாம் பூசிய தங்க தகடுகள் மற்றும் தங்கக் கட்டிகளை கண்டுபிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து 4 கிலோ 158 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ. 1.93 கோடி. இதையடுத்து சுங்கத் துறை அதிகாரிகள், பயணிகள் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.