சென்னை: அம்பத்தூர், லெனின் நகரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருக்கு திருமுல்லைவாயில் குளக்கரை சாலையில், 'மோட்கோல்டு' என்ற மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை குறித்து விளம்பரம் செய்வது தொடர்பாக முதலீட்டாளர்களை வரவேற்பதாக விளம்பரம் செய்துள்ளார். இதைக் கண்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நீலம்மேகம் என்பவரின் மூலம் பல்லாவரத்தைச் சேர்ந்த வைஷாலி என்பவர் இதற்காக ரூ.7 லட்சம் முதலீடு செய்தார்.
இந்நிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன்பு வரையில் மருத்துவமனையின் லாப பணத்தை வைஷாலி பெற்றுள்ளார்.பின்னர், தான் எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் இல்லாததால் லாபம் உட்பட அசல் தொகையை சுந்தரமூர்த்தியால் வைஷாலிக்கு திருப்பி தர முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், வைஷாலி பலமுறை தனது முதலீடு பணத்தைக் கேட்டும் தரமால் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, நேற்று (நவ.28) சேலத்தில் வசிக்கும் நீலமேகம் என்பவரின் மூலம் வைஷாலி என்பவர் பேச்சுவார்த்தை நடத்த திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் உள்ள டீ கடைக்கு உடனடியாக வரும்படி கூறியுள்ளார். இதனையடுத்து சுந்தரமூர்த்தி தனது இருசக்கர வாகனத்தில் சிவலிங்கம் என்பவருடன் சம்பவ இடத்தில் சென்று பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வைஷாலியுடன் வந்த பாரதிதாசன், சிவா, தேவகுமார் ஆகியோர் சுந்தரமூர்த்தியை தாக்கியபடியே காரில் கடத்திச் சென்றனர். இவை அனைத்தும் அங்கு இருந்த சிசிடிவியில் பதிவாகியது. இதுகுறித்து சுந்தரமூர்த்தியுடன் வந்த சிவலிங்கம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவலின் பேரில், அங்கு விரைந்த திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் விஜயராகவன் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் சுந்தரமூர்த்தி மகள் விஷ்ணுபிரியா அளித்தப் புகாரின் அடிப்படையில், திருமுல்லைவவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து காவல் ஆய்வாளர் விஜயராகவன் தலைமையிலான தனிப்படை போலீசார் செல்போன் டவர் மூலம் பல்லாவாரத்திற்கு சென்று சுந்தரமூர்த்தியை மீட்டு அவரைக் கடத்திய 4 பேரையும் 3 மணி நேரத்தில் கைது செய்தனர்.
பிடிபட்டவர்களை காவல்நிலையம் அழைத்து வந்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில், மருத்துவமனை உரிமையாளர் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தஞ்சையில் முதியோர் படுகொலை.. மனநலம் பாதித்த மூத்த மகனுக்கு சிறை!