சென்னை: கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 11 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டதை எதிர்த்தும், 2017-18, 2018-19, 2019-20ஆம் கல்வியாண்டுகளில் கல்விச் செலவை மறு நிர்ணயம் செய்யக் கோரியும், 2020-21ஆம் ஆண்டுக்கு நியாயமான செலவை நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 2019-2020ஆம் ஆண்டிற்கான நிலுவை தொகையை டிசம்பர் 14ஆம் தேதிக்குள் செலுத்த கடைசி வாய்ப்பு வழங்குவதாக தெரிவித்த நீதிபதி, அவ்வாறு செலுத்தாத பட்சத்தில் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (டிசம்பர் 14) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2019-20ஆம் ஆண்டுக்கான செலவுத்தொகையாக 375 கோடியே 89 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பள்ளிகளுக்கு செலுத்துவதற்கான நடைமுறையை தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதி, வழக்கை இறுதி விசாரணைக்காக ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: அரசு சார்பில் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 400 கோடி... அரசு பள்ளிகளை ஏன் மேம்படுத்தக் கூடாது?