கடந்த மார்ச் இரண்டாம் தேதி தொடங்கிய 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 35ஆயிரத்து 525 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 19 ஆயிரத்து 166 தனித்தேர்வர்கள் அடங்குவர். ஆனால், நேற்று நடைபெற்ற இறுதித் தேர்வுக்கு 34 ஆயிரத்து மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக ரயில் சேவை நாடு முழுவதும் நிறுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் பேருந்து சேவை நேற்று காலை முதல் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டுமே இயக்கப்பட்டது.
இதனால் சில மாவட்டங்களில் மாணவர்கள் தேர்வெழுத செல்ல முடியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. கரோனா தொற்று குறித்த அச்சத்தின் காரணமாகவும் மாணவர்கள் தேர்வெழுதாமல் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து கல்வித் துறை அலுவலர்கள் கூறுகையில், வழக்கமாக தேர்வு நடைபெறும்போது சுமார் நான்கு விழுக்காடு மாணவர்கள் தேர்வு எழுத வராமல் இருப்பார்கள். நேற்று நடைபெற்ற தேர்வினை எழுத 5 லட்சம் மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலும் தனித்தேர்வர்கள் வராமல் இருந்திருக்கலாம். தேர்வு எந்த இடத்திலும் பாதிப்பின்றி நடைபெற்றதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனா அறிகுறியுடன் ஊர் சுற்றிய தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு