சென்னை: ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சரஸ்வதி நகரில் தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பங்கில் காலை வாடிக்கையாளர்கள் பெட்ரோல் போட்டு விட்டுச் சென்ற போது சிறிது தூரத்திலேயே வாகனங்கள் பழுதாகி நின்றுள்ளது.
இதனால் வாகனத்தில் இருக்கக்கூடிய பெட்ரோலை குழாய் மூலம் எடுத்து சோதனை செய்துள்ளனர். அப்போது பெட்ரோலுடன் தண்ணீரும் கலந்து வந்ததால், இதைப் பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சமயத்தில் சிலர் பிளாஸ்டிக் கேனில் பெட்ரோல் போடுமாறு தெரிவித்தனர். அப்போதும் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து வருவது தெரிந்ததால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயில் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். மேலும் ஒரு பாட்டிலில் பெட்ரோலை பிடித்து சோதனை செய்து பார்த்தனர். அப்போது பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து வருவதைப் பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பெட்ரோல் பங்கை மூடுமாறு ஊழியர்களிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து திருமுல்லைவாயில் போலீசார் தொடர்ந்து விசாரித்ததில் கடந்த மூன்று மாதங்களாக பெட்ரோல் பங்க் மூடி இருந்த நிலையில் முறையான பராமரிப்பு மேற்கொள்ளாமல் இன்று காலை முதல் மீண்டும் திறக்கப்பட்டதால் பெட்ரோலுக்கு பதிலாகத் தண்ணீர் வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் 30 இருசக்கர வாகனங்கள் வரை பாதிப்படைந்துள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். பெட்ரோலுக்கான பணத்தைத் திருப்பி தரவும், வாகனங்கள் ஏதேனும் பழுது ஏற்பட்டால் சரி செய்து தர பெட்ரோல் பங்க் நிர்வாகம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதால் திருமுல்லைவாயில் போலீசார் முன்னிலையில் பெட்ரோல் பங்க் நிர்வாகம் வாடிக்கையாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க: மசாஜ் சென்டரில் புகுந்து கத்தி முனையில் திருடிய அடையாளம் தெரியாத நபர்கள்