சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை கேனால் சாலையில் எஸ் எம் எனும் மஹால் அமைந்துள்ளது. இங்கு பல பிரபலமான நிறுவனங்களின் பிஸ்கட், சாக்லேட், சிப்ஸ், மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவை அதன் MRPஐ விட மலிவான விலையில் விற்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு முன்னதாக தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் அங்குச் சோதனை மேற்கொண்டனர்.
அதில், கல்யாண மண்டபத்தின் உரிமையாளர் செந்தில் என்பவர் காலாவதியான பொருள்களை வாங்கி வந்து தனது மண்டபத்தின் ஒரு பகுதியில் எந்தவித அங்கீகாரமும் இன்றி ஒரு மினி சூப்பர் மார்க்கெட்டை நடத்தி வந்துள்ளது தெரியவந்தது.
தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 2.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3.5 டன் எடையுள்ள காலாவதியான உணவு, மளிகைப் பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், சம்பந்தப்பட்ட கல்யாண மண்டபத்திற்கு சீல் வைத்த உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் அதன் உரிமையாளர் செந்தில் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பாலியல் சீண்டல் செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது!