ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இவை கலைஞர் காப்பீட்டுத் திட்டம், அம்மா மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என முன்னாள் முதலமைச்சர்கள் பெயரில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. ஆனால், காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சைப் பெற்ற பயனாளர்களின் பணம் உரிய முறையில் அரசு மருத்துவமனைகளுக்கு வருவது இல்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. குறிப்பாக, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, தமிழ்நாடு அரசுக் காப்பீட்டுத் திட்டம் மூலம் கிடைக்க வேண்டிய தொகை வந்து சேரவில்லை எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசு காப்பீட்டுத் திட்டத்தை யுனைடெட் இன்சூரன்ஸ் இந்தியா நிறுவனம் கையாண்டு வருகிறது. இதில் மூன்றாம் தரப்பு நிர்வாக நிறுவனமாக, மெடி அசி (medi assi) பிரைவேட் லிமிடெட் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பணம் வந்து சேராத விவகாரத்தில், மெடி அசி நிறுவனத்திற்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சென்னை மத்தியக் குற்றப் பிரிவின் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விசாரணையில், முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பேரில், திருவள்ளூரில் உள்ள ஒரு வங்கியில் போலி கணக்கு தொடங்கப்பட்டு, பெரிய அளவில் மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டது. அரசு மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையைத் திருடி வந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறை சம்பந்தப்பட்ட தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த குணசேகரன் (37),சரவணன் (31), கமல்ஹாசன் (36) ஆகிய மூன்று பேரைக் கைது செய்து காவலர்கள் விசாரணை நடத்தினர்.
அதில், கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை மோசடியில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அந்நபர்கள் அளித்துள்ளனர். சுமார் இரண்டு கோடி ரூபாய் அளவிற்கு பண மோசடி செய்து அந்நபர்கள் சொத்துக்களை வாங்கியது தெரியவந்துள்ளது. இந்நிலையில், கைதான மூவரின் 10 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்தின் தலைவரான குணசேகரனிடம் இருந்து, எட்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும், மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளும், எட்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்ட தனியார் நிறுவன காப்பீட்டு நிர்வாகிகள் மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முடிவு செய்துள்ளது. மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மோசடியில் அரசு ஊழியர்களுக்கும் ,அரசு மருத்துவமனையை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பழிதீர்க்கும் நோக்கில் திமுக ஒன்றியக் கவுன்சிலர் கொலை: மூவர் கைது!