சென்னை: அரும்பாக்கம் ஜானகி ராமன் காலனியில் வசித்து வந்தவர் கோபாலசாமி(65). இவர் ஸ்டான்லி மருத்துவமனையில் கேன்டீன் நடத்தி வந்தார். ் இவரது மகன் கண்ணபிரான் சொந்தமாக சாப்ட்வேர் தொழில் செய்து வந்தார். மேலும் கண்ணபிரானுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கண்ணபிரானுக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி குழந்தையுடன் பெங்களூரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கண்ணபிரான் தனது தாய்,தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணபிரான் மற்றும் அவரது தந்தை கோபால்சாமி இருவரும் சேர்ந்து வீடு வாங்க 84 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த கடனை கட்ட முடியாமல் சிரமத்திற்கு ஆளானதால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கடன் சுமை அதிகரித்தது, மற்றொரு புறம் மனைவி, குழந்தை பிரிந்து சென்ற ஏக்கம் காரணமாக செய்வதறியாது திகைத்த கண்ணபிரான் மற்றும் அவரது பெற்றோர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
பின்னர் கண்ணபிரான் தனது நண்பரை தொடர்பு கொண்டு தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், வீட்டை பார்த்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து கோபால்சாமி, பானுமதி, கண்ணபிரான் ஆகிய 3 பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
கண்ணபிரானின் நண்பர் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற அரும்பாக்கம் போலீசார் 3 பேரின் உடலை மீட்டு கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில் சாவுக்கு காரணம் யாருமில்லை என எழுதி இருந்தது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கடன் கேட்டு மிரட்டியதால் தற்கொலை; ஒருவர் கைது