கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகின்ற மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டுமே இயங்கும் எனவும், டாஸ்மாக் கடைகள், பார்கள் உள்ளிட்டவை இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு குடிமகன்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தி, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்திற்குள் தள்ளியுள்ளது.
இதனால் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்துவருகின்றனர். காவல் துறையினர் தனிப்படை அமைத்து அவர்களைக் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தசரதபுரம் மீன் மார்க்கெட் அருகில் காவல் துறையினர் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில் சட்டவிரோதமாக மது வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சூளைமேடு பகுதியைச் சேர்ந்த தேவராஜ் (40), சாலிகிராம் பகுதியைச் சேர்ந்த பிரதீப் (31) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 189 மதுபாட்டில்கள், 20 ஆயிரம் ரூபாய் பணம், கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கேகே நகர், பிருந்தாவன நகர் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த கேகே நகர் பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான் என்பவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 69 மது பாட்டில்கள், 2,200 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இவர் சமீபத்தில் வெளியான திரௌபதி திரைப்படத்தில் நடித்தவர் ஆவார். இந்த மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: சாராயம் காய்ச்ச வெல்ல மூட்டைகளுடன் வந்த ஒருவர் கைது