சென்னை: அம்பத்தூர் அடுத்த பட்டரவாக்கம் சாலையில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் ஏராளமான வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 23ஆம் தேதி ஆயுத பூஜை அன்று, இரவில் 200க்கும் மேற்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலார்கள் மதுபோதையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக தொழிற்சாலையின் மேலாளர் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.
அவசர அழைப்பு எண் 100-இல் வந்த அழைப்பை விசாரிக்கச் சென்ற அப்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் ரகுபதி மற்றும் காவலர் ராஜ்குமார் உள்ளிட்ட சக காவலர்களை அடுத்தடுத்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போலீசார் வந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த காவலர் ரகுபதி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து தொழிற்சாலையில் போலீசார் குவிக்கப்பட்டு, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தாக்குதலில் ஈடுபட்ட 5 வடமாநிலத் தொழிலாளர்களான ரோஷன் குமார், பிளாக் தாஸ், பின்டு, ராம்ஜித் மற்றும் சுராஜ் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து, தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், இரு தரப்பினரின் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசார் வட மாநில இளைஞர்கள் கட்டை மற்றும் இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு துரத்தக் கூடிய காட்சி நேற்று வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த விவகாரத்திற்கு கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் இணையத்தில் பேசுபொருளானது. இதனிடையே இந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்களை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். அதனடிப்படையில், வீடியோ மூலம் இதில் ஈடுபட்ட 28 வடமாநிலத் தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
பின்னர் செங்குன்றம் காவல்துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில், அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கிரி, ஆய்வாளர்கள் ஜெயகிருஷ்ணன், ரமேஷ், டில்லிபாபு உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை காவல் துறையினர் மற்றும் 50க்கும் மேற்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டு, கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது T-2 அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில், வழக்கு எண் 598/23 U/s 147, 148, 294(b), 324, 353, 506(ii) IPC r/w 3 of TNPPDL Act உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதில் தொடர்புடைய 28 பேரை அதிரடியாக கைது செய்த போலீசார், காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு, வேறு நபர்களுக்கும் தொடர்பு இருந்தால் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் டுக்கிராஜ்வன்சி (20), மனோஜ்ராஜ்வன்சி (32) கணேஷ் ராஜுநாத் வன்சி (22), மதன்குமார் (20), முகேஷ் ராஜ்வன்சி (26), சஞ்சய் குமார் (25), சுராஜ் குமார்(20), ராஜேஷ் பண்டித் (26), ரகுராஜ்வன்சி(18), பிரேம்குமார் (18), விகாஷ் குமார்(20), ரவிக்குமார் (19), கரண்ஜீத் குமார் (24), சங்கர் கீபாத் (30), சந்தன் (20), உபேந்திரன் ராஜ்வன்சி (31), ஆஷிஷ் ராஜ் வன்சி (33), லக்ஷ்மன் குமார் (22), சகல்தீப் ராஜ் வன்சி (40), குல்ஷன் குமார் (27), அனுப்ராஜ் வன்சி (27), ராஜ்ப்ளம் குமார் (22), காரு ரவி தாஸ் (33), அனுஷ் சர்மா (28), அர்பிந்த் குமார் (21), குட்டு பண்டித் (28), ஸ்ரீ நந்தன் குமார் (25) மற்றும் தன்ராஜ் குமார் (19) ஆகிய புலம் பெயர் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.