சென்னை: 2017ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் 1060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வை நடத்தியது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது விசாரணையில் உறுதிசெய்யப்பட்டது.
மேலும் பாலிடெக்னிக் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நடத்திய விசாரணையில், பல்வேறு தேர்வர்களுக்கு 20 மதிப்பெண்கள் முதல் 100 மதிப்பெண்கள் வரை கூடுதலாக வழங்கி முறைகேடுகள் நடந்ததும் உறுதிசெய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் இந்தத் தேர்வினை ரத்துசெய்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டது.
இதனையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல் துறையிலும் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. அதில் உறுதியான 196 தேர்வுகளுக்கு ஏற்கனவே வாழ்நாள் தடைவிதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி அக்டோபர் மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட, மேலும் 66 தேர்வர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தடைவிதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்வர்களின் முகவரி, அவர்களின் பட்டப்படிப்பு, தந்தை பெயர், பிறந்த தேதி ஆகியவையும் http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசு அலுவலகங்களில் ரெய்டு - ரூ.27 லட்சம் பணம் பறிமுதல்