சென்னை: சென்னை ஐஐடி மாணவர்கள் நடத்தும் 25வது ஆண்டு சாஸ்த்ரா தொழில்நுட்பத் திருவிழா, இன்று (ஜன.3) முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சைபர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களில் ரோபாட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த நிகழ்வுகள் நடைபெற உள்ளன என இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.
மேலும், சென்னையில் ஏற்பட்ட அதிகனமழையின்போது, கடந்த ஆண்டு சென்னை ஐஐடியின் வாட்டர் லாக்கிங் முறையை பயன்படுத்தி, தண்ணீர் தேங்கிய இடங்களைக் கண்டறிந்தது போல், இந்த மழையின்போதும் உதவினோம். வரும் காலத்தில் செயற்கைக் கோள்களின் உதவியுடன், குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் எவ்வளவு மழை பெய்யும் என்பதையும், தண்ணீர் வடிவதற்கான வழிமுறைகளையும் கண்டறிய உள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் காமகோடி, “தான் சென்னை ஐஐடியில் சேர்ந்த ஆண்டில் சாஸ்த்ரா தொழில்நுட்பத் திருவிழா நடைபெற்றது. தற்பொழுது அதன் 25வது திருவிழா நடைபெறுகிறது. 2047ஆம் ஆண்டில் சூப்பர் பவர் பாரதத்தைக் காண புதுமை கண்டுபிடிப்புகள் முதன்மையானதாகும்.
இளம் கண்டுபிடிப்பாளர்கள் சந்தித்துக் கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும், போட்டியிடவும் ஏதுவாக தனித்துவமிக்க தளத்தை இது போன்ற தொழில்நுட்ப விழாக்கள் வழங்குவதால், தங்களின் கண்டுபிடிப்புகள் குறித்து மிக விரிவான மதிப்பீட்டை அவர்களால் பெற முடியும்.
இவ்விழாவில் மொத்தம் 110 நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஏறத்தாழ 2,000 பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சாஸ்த்ராவின் முதன்மையான கருத்தரங்கில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உள்பட 12 புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
போயிங்கின் ஏரோமாடலிங் போட்டி, பிளிப்கார்ட் கிரிட் 5.0 ரோபாட்டிக்ஸ் சேலன்ஞ் இறுதிப்போட்டி இதில் இடம்பெறவிருக்கின்றன. நடப்பாண்டில் 34 வகையான போட்டிகளை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம், நடைமுறையில் உள்ள நிஜவாழ்க்கை பிரச்னைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து உண்மையான, புதுமையான தீர்வுகளைப் பெறும் தனித்துவமான வாய்ப்பு பங்கேற்பாளர்களுக்கு கிடைக்கிறது.
ரோபாட்டிக்சில் ஆர்வமுள்ளவர்கள் பிளிப்கார்ட் கிரிட் 5.0 ரோபோடிக்ஸ் சேலஞ்ச் முதல் ரோபோ வார்ஸ் வரை அனைத்து வகையான காட்சிகளையும் காணலாம். போட்டித்திறன் கொண்டவர்களுக்காக ஏரோமாடலிங், புரோகிராமிங், டிசைன் மற்றும் கேள்வி-பதில் போன்றவற்றில் அதிக சவால்கள் இடம் பெற்றுள்ளன. 'என்விசேஜ் கிளப்' நடத்தும் ரிஃப்ளெக்டர் ஸ்ஃபெரா, க்ரூவ்-எ-கிராஃப், ஃப்ளாஷ் வேவ், டிரான் டான்ஸ், டெக் அம்பியன்ஸ் திட்டங்கள் உள்பட பல்வேறு நிகழ்வுகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
தாக்கத்தை ஏற்படுத்தும் முன்னெடுப்புகள், விழிப்புணர்வு நிகழ்வுகள், கல்லூரி வினாடி-வினா போட்டி உள்ளிட்டவை மூலமாக மூளைநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெளிப்படுத்துவதை 'ஃபர்கெட் மீ நாட்" பிரச்சாரம் நோக்கமாக கொண்டுள்ளன. புரிதல், இரக்கம் ஆகியவற்றை வளர்ப்பதன் மூலமும், பிரச்சாரம் போன்றவை மூலமும் அவர்களுக்கு ஆதரவான சமூகத்தை உருவாக்க முயல்கிறது.
'என்க்ரிப்ட்கான் 2024', இது சைபர் பாதுகாப்பு குறித்த 2 நாள் சர்வதேச ஆராய்ச்சி மாநாடாகும். ஜனவரி 6ஆம் தேதி இந்த வளாகத்தில் தொடங்கும் மாநாட்டை, சாஸ்த்ரா 2024 பெருமையுடன் நடத்துகிறது. சிறப்பு வாய்ந்த இம்மாநாட்டின் தொடக்க அமர்வில், இணையப் பாதுகாப்பு குறித்து பேசப்பட உள்ளது. தற்போது வளர்ந்து வரும் சூழ்நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால் யாருக்கும் வேலை இழப்பு ஏற்படாது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி அருகே 790 ஆண்டுகள் பழமையான கமலைக் கிணற்றுடன் கூடிய கல்வெட்டு கண்டுபிடிப்பு!