சென்னை: கடந்த 2007ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அரசால், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தொலைதூரத்தில் உள்ள கிராமங்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட நாள்களில் அங்கேயே சென்று நோய்களை கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை நடமாடும் மருத்துவக்குழுக்கள் மூலம் அளித்திட 100 நடமாடும் மருத்துவ வாகனங்கள் செயல்பாட்டுக்கு வந்தன.
இதையடுத்து, 2008 ஆம் ஆண்டு 285 நடமாடும் மருத்துவ வாகனங்கள் வாங்கப்பட்டு, மொத்தம் 385 நடமாடும் மருத்துவக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. இந்த மருத்துவ குழுவில், தலா ஒரு மருத்துவ அலுவலர், செவிலியர், ஓட்டுநர், துப்புரவு பணியாளர் பணியமர்த்தப்பட்டனர். தற்போது 385 வட்டாரங்களிலும் நடமாடும் மருத்துவக் குழு வாகனங்கள் மூலம் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், இந்த 385 நடமாடும் மருத்துவக் குழு வாகனங்களை நடமாடும் மருத்துவமனைகளாக மேம்படுத்தி ஆய்வக நுட்புணர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, 2021 - 2022 ஆம் நிதியாண்டின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், தொலைதூர கிராமங்களுக்கு மருத்துவ சேவையை வலுப்படுத்த 389 புதிதாக நடமாடும் மருத்துவக் குழு வாகனங்கள் ரூ.70 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் ஒரு வாகனத்திற்கு தலா ரூ.18 லட்சம் செலவில், தமிழ்நாட்டில் உள்ள 389 நடமாடும் மருத்துவ வாகனத்தை மாற்றுவதற்கு ரூபாய் 70.02 கோடி நிதியினை தேசிய நலவாழ்வு குழுமத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் புதிதாக 389 வாகனங்கள் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மூலம் வாங்கப்பட்டு மறுவடிவமைப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், இதன் சேவையை தொடங்கி வைக்கும் விதத்தில், முதற்கட்டமாக 133 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாவது கட்டமாக சென்னை, கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் 256 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடமாடும் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையும் முதலமைச்சர் செய்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: உயர்கல்விக்கு பொற்காலத்தை அளிக்கும் அரசு திமுக- மு.க. ஸ்டாலின்