கரோனா தொற்று பாதிப்பு மருத்துவ துறையின் மீது மிகப் பெரிய அழுத்தத்தை கொடுத்துள்ளது. மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிலும் குறிப்பாக நோயாளிகளுக்கு ஐசியூ எனப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. ஆனால், அவற்றின் எண்ணிக்கைகள் போதுமான அளவில் இல்லததால் விலை மதிப்பற்ற உயிர்களை இழந்து வருகிறோம். நகர்ப்புற பகுதிகளிலேயே இந்த நிலை என்றால் கிராமப்புறங்களில் அதனைவிட மோசம் என்றுதான் சொல்ல வேண்டும்.
வளர்ந்த நாடுகளில் 1 லட்சம் நபர்களுக்கு 10 ஐசியூ படுக்கைகள் இருக்கின்றன. அதே நேரத்தில் இந்தியாவில் 1 லட்சம் பேருக்கு 2.5 ஐசியூ படுக்கைகளே உள்ளன. அவற்றில் 80 விழுக்காடு வசதி நகர் பகுதியில் உள்ளன. ஆனால் மக்கள் தொகையில் சுமார் 70 விழுக்காட்டினர் ஊரக பகுதிகளில் வசிக்கின்றனர். இதனால் பெரும்பாலான கிராமப்புற மக்களுக்கு தீவிர சிகிச்சை உதவி கிடைப்பதில்லை. இதனை சரி செய்வதே தங்களது இலக்கு என்கிறார் சிபாகா (CIPACA - Chennai Interventional Pulmonology and Critical Care Associates) நிறுவனர் ராஜா அமர்நாத்.
நாட்டை உலுக்கும் கோவிட் தொற்று, ஐசியூ சேவையின் முக்கியத்துவம், நகர் மற்றும் ஊரக பகுதிகளுக்கான இடைவெளி குறித்து இவர் பேசுகையில், "நாங்கள் 5 ஆண்டுகளாக இந்த சேவையில் ஈடுபட்டுள்ளோம். ஊரக மற்றும் நகருக்கு வெளியே உள்ள பகுதியுள்ள மருத்துவமனைகளுடன் இணைந்து ஐசியூ சேவைகள் வழங்குகிறோம். சில மருத்துவமனைகளில் ஐசியூவுக்கென இடமிருக்கும், ஆனால் அதனை மேலாண்மை செய்வது சிரமமாக இருக்கும். அனைவராலும் ஐசியூக்களை தொடர்ந்து நடத்த முடியாது. நாங்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் உதவியாளர்கள் என அனைவருக்கும் பயிற்சி அளித்து, முழுக்க முழுக்க இந்த சேவையை கவனித்துக்கொள்கிறோம். எங்களிடம் 350க்கும் மேற்பட்ட ஐசியூக்கள் உள்ளன. இதன்மூலமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களைக் காப்பாற்றியுள்ளோம்" என்று கூறினார்.
நகரங்களில் உள்ள வசதி படைத்தவர்களாலேயே ஐசியூவில் சிகிச்சை அளிக்க பணம் செலுத்த முடியாத சூழ்நிலையில் கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் ஐசியூவை நிறுவ வேண்டும் என்று கூறுகிறீர்கள். சாதாரண மக்களால் இதற்கு செலவு செய்ய முடியும் என நினைக்கிறீர்களா என கேட்டபோது, "5 நட்சத்திர ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை எப்படி அதிகமாக இருக்கிறதோ, அதேபோல், ஸ்டார் மருத்துவமனைகளில் மட்டும்தான் ஐசியூ வசதி இருக்கிறது. இதனால் ஐசியூ சிகிச்சை என்றாலே அதிக செலவு ஏற்படும் என நினைக்கிறோம். ஆனால், சாதாரண மருத்துவமனைகளில் இதுபோன்ற வசதிகளை கொடுக்கும்போது தேவையில்லாத செலவுகளைக் குறைக்க முடியும். இதனால் நகரில் உள்ள பெரு மருத்துவமனைகளில் ஆகும் செலவில் 25 விழுக்காடு தான் ஆகும். 2 மணி நேரம் பயணம் செய்து ஐசியூ சேவையைப் பெறும்போது மக்களுக்கு கூடுதல் செலவாகிறது. இதனை மாற்றி அவர்களின் வசிப்பிடங்களிலேயே ஐசியூ வசதி கிடைத்தால் சாதாரண மக்களாலும் அவசர சிகிச்சை வசதியை அணுக முடியும்.
இதற்கு உள்கட்டமைப்பு வசதிகள் பெரிய பிரச்னை அல்ல. மாறாக தொடர்ந்து இயக்குவதற்கு தேவையான தேர்ந்த பணியாளர்கள் உள்ளிட்டவை ஊரக பகுதிகளில் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனை போக்க நாங்கள் ஊரகப் பகுதிகள் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். தேவைப்பட்டால் நாங்களே மருத்துவர்களை அனுப்பி வைக்கிறோம். டெலி கவுன்சிலிங் மூலமாகவும் வழிகாட்டுதல்கள் வழங்குகிறோம். நகரங்களில் அதிகம் புற்றுநோய், நுரையீரல் பிரச்னை, இதய பிரச்னை போன்றவற்றுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவர். கிராமங்கலில் விஷம் அருந்துதல், பாம்பு கடி, தொழிற்சாலை விபத்து, நாள்பட்ட தொற்று ஆகியவை அதிகம் இருக்கும். கிராமங்களில் எவ்வாறு ஐசியூ சேவைகளை வழங்குவது என்பதை தெளிவாக வரையறை செய்துள்ளோம்.
தற்போது பெருந்தொற்று பாதிப்பால் பலரும் ஊரகப் பகுதிகளில் மருத்துவ வசதிகள் குறித்து பேசி வருகிறார்கள். இதற்கு முன்னரும் ஊரகப் பகுதிகளில் இதே நிலைதான் நீடித்தது என்று கூறினார். கரோனா தொற்று கட்டுக்குள் வந்தபிறகும் இது இருக்கப்போகிறது. நாட்டில் உள்ள ஒவ்வொரு தாலுக்காவிலும் அவரச கிசிச்சை மையங்கள் இருக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இந்த பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம் " என்றார்.
இதையும் படிங்க: 'இந்த மாசத்துக்கு இது போதும்' -ரேசனில் 14 பொருள்கள்