சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இண்டிகோ ஏர்லைன்ஸ் ஏடிஆர் ரக பயணிகள் விமானம் மீது, உடைமைகளை ஏற்றிச் செல்லும் டிராக்டர் மோதியதில் விமானம் லேசாக சேதம் அடைந்துள்ளது.
இந்த நிலையில், பீரோ ஆஃப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி எனப்படும் பிசிஏஎஸ் விமான பாதுகாப்பு அதிகாரிகள், சேதமடைந்த விமானத்தை ஆய்வு செய்கையில், இந்த விமானம் மீண்டும் உடனடியாக பறப்பதற்கு தகுதியற்றது எனக் கூறி, விமானத்தை இயக்க அனுமதி மறுத்துள்ளனர்.
அதோடு, டெல்லியில் உள்ள டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேசன் எனப்படும் டிஜிசிஏ-க்கும் தகவல் அளித்துள்ளனர். இதை அடுத்து, டிஜிசிஏ இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, குறிப்பிட்ட அந்த விமானம், மறு உத்தரவு வரும் வரை பறப்பதற்கு தடை விதித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘பயணிகளின் உடைமைகளை ஏற்றிச் சென்ற டிராக்டர், விமானத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை முதல் திருச்சி வரை செல்லும் இண்டிகோ விமானத்தின் 24 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சேதமடைந்த விமானம் சரி செய்யப்பட்டு, நாளை (நவ.22) மீண்டும் விமான சேவை தொடங்கும்’ என்று கூறியுள்ளது.
மேலும், பயணத்தை ரத்து செய்த பயணிகளுக்கு அவர்கள் செலுத்திய கட்டணங்கள் திருப்பிச் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளது. இதையடுத்து, இந்த விபத்து குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விமானம் முழுமையாக பழுது பார்க்கப்பட்டு, மீண்டும் வானில் பறப்பதற்கு பிசிஏஎஸ் மற்றும் டிஜிசிஏ அனுமதி பெற்ற பின்புதான், விமானம் மீண்டும் இயக்கப்படும் எனக் கூறப்படுகிறது. நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில், யாருக்கும் காயமோ பாதிப்போ ஏற்படவில்லை.
இதையும் படிங்க: காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற நபர்.. தண்ணீர் ஊற்றி மீட்ட காவல் துறையினர்..!