சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவதால், பூமியின் பார்வையில் இருந்து சூரியன் மறையும். இதுவே 'சூரிய கிரகணம்’ என்று கூறப்படுகிறது. அவை முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் என மூன்று வகையாக நிகழலாம். இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணமாக இன்று நிகழ்கிறது.
இந்த கடைசி சூரிய கிரகணம் இன்று (டிசம்பர் 4) இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு தொடங்கி, நான்கு மணி நேரம் வரை நீடிக்கும். இந்தியாவில் இந்த சூரிய கிரகணத்தைக் காண முடியாது என்றாலும், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் இணையதளத்தில் நேரடியாக காண முடியும்.
எந்தெந்த நாடுகளில் பார்க்கலாம்?
தென்னாப்பிரிக்கா, சிலி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தென்பகுதியில் பகுதி சூரிய கிரகணமாக தெரியும்.
சூரிய கிரகணம் அன்று சொல்லப்படும் கட்டுக்கதைகள்:
கிரகணங்கள் பற்றி பல்வேறு கற்பிதங்கள் உண்டு. கிரகண நேரத்தில் வெளியே நடமாடக்கூடாது, சாப்பிடக்கூடாது என்ற பல்வேறு கட்டுக்கதைகள் உள்ளன. ஆனால், கிரகணங்களால் நம் உடல்நலனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
உலகின் பல பகுதிகளில் சூரிய, சந்திர கிரகணத்தின்போது கர்ப்பிணிகளை பார்க்க அனுமதிப்பதில்லை, அவர்கள் கிரகணத்தினைப் பார்க்கக்கூடாது என்ற மூட நம்பிக்கை இன்றளவும் உள்ளது. இதுபோன்ற நம்பிக்கைக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. எப்போதும் போல் கர்ப்பிணிகள் அன்றும் நடமாடலாம், சாப்பிடலாம் எந்த மாற்றமும், பாதிப்பும் ஏற்படாது.
சூரிய கிரகணத்தைப் பார்க்க அனைவருக்கும் இருக்கும் முன்னெச்சரிக்கையே இவர்களுக்கும் பொருந்துமே தவிர, எந்தப் புதிய கதிர் வீச்சுகளும் ஏற்படாது. சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது; இதனைப் பார்ப்பதற்கு அதற்குரிய கிரகண கண்ணாடிகளை அல்லது முறையான ஃபில்டர்களுடன் கூடிய கேமராவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சூரிய கிரகணத்தின் போது சாப்பிடுதல், குடித்தல், குளித்தல், வெளியே செல்லுதல் போன்ற செயல்களைச் செய்யலாம்.
இதையும் படிங்க ; விவசாயிகள் உயிரிழப்பில் தரவுகள் இல்லையா? ஆதாரங்களை காட்டி ராகுல் காந்தி கண்டனம்!