தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் மே 7 ஆம் தேதி பொறுப்பேற்றதும், கரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, அத்திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார். இதில், முதல் தவணையாக ரூபாய் 2 ஆயிரம் வழங்க தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் சுமார் 2, 07,67,000 அரிசி அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி செலவில் 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர், 7 குடும்பங்களுக்கு வழங்கி இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெற்ற விழாவில், தலைமை செயலாளர் இறையன்பு, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உணவுத்துறை செயலாளர், முக்கிய அலுவலர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
நாள் ஒன்றிற்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்படுவதோடு, அனைத்து நியாய விலைக்கடைகளிலும் வரும் மே மாதம் 15ம் தேதி முதல் தினமும் காலை 8 மணி முதல் 12 மணி வரை நிவாரண தொகை விநியோகம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனா காலக்கட்டம் என்பதால் தகுந்த இடைவெளியை பின்பற்றி பொதுமக்கள் நிவாரண தொகையை பெற்றுக்கொள்ள அனைத்து ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, வேறு மாவட்டத்திற்கு சென்றவர்களுக்கும் முறையாக நிவாரணம் வழங்கப்படும் எனவும், நிவாரண தொகை முறையாக பொது மக்களுக்கு சென்று சேர்கிறதா என்பதை கண்காணிக்க துணை ஆட்சியர், நிலை அலுவலர்கள் தலைமையில் கண்காணிப்பு குழு ஒன்றை அமைத்து கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.