சென்னை: குறைந்த காலத்தில் அதிகளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், ஏராளமான மக்கள் கிரிப்டோ கரன்சி, கோல்டு டிரேடிங் உள்ளிட்ட நிதி முதலீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்து லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர். அந்த வரிசையில், ஹாஷ்பே என்ற நிறுவனம் கிரிப்டோ கரன்சி முதலீடு என்ற பெயரில் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்த நிறுவனம், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் நிறுவனம் அமைத்து கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி, ஆயிரக்கணக்கான மக்களிடம் சுமார் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
அதில், ஹாஷ்பே (Hashpe) என்ற இந்த நிறுவனம் TCX காயின் என்ற கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி மோசடி செய்துள்ளதாகவும், எம்எல்எம் என்ற அடிப்படையில் ஆட்களை சேர்த்து வைத்தால் கமிஷன் தொகை தரப்படும் என்றும் கூறி பணத்தை வசூலித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால், 300ஆவது நாளில் மூன்று மடங்காக மூன்று லட்ச ரூபாய் கிடைக்கும் எனக் கூறி பொதுமக்களிடம் மோசடியை செய்ததாகவும், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் ஆன்லைன் மூலமாகவே பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வாடிக்கையாளர்களை முதலீடு செய்ய வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்டப் பல மாநிலங்களிலும் இந்த நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாகவும், இந்த நிறுவனத்தின் நிர்வாகிகளாக இருந்த பாபு, இம்ரான், ஹித்தேஷ், ஜெயின் ஆகியோர் பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்துவிட்டு திருப்பித் தராமல் மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரை அழைத்துவந்து நிகழ்ச்சிகளை நடத்தி விளம்பரம் செய்ததால், நம்பி பணத்தை முதலீடு செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களிலும் உள்ள நட்சத்திர விடுதிகளிலும் சொகுசு கப்பலிலும் நடிகைகளை அழைத்து கூட்டங்கள் நடத்தியதாகவும், பல பேர் இதில் முதலீடு செய்து கோடிக்கணக்கான ரூபாயை இழந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மோசடிகளை செய்து வரும் இந்த நிறுவனத்தின் நிர்வாகிகளை கைது செய்து, மோசடி செய்த பணத்தை மீட்டுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் இழந்த தொகையின் மதிப்பை அடிப்படையாக கொண்டு, இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்படலாம் என சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசு வேலை ஆசை - ரூ.2 லட்சம் மோசடி செய்த உதயநிதி நற்பணி மன்றத் தலைவர்!