பழவலூர் சிலை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான தீனதயாளனுடன் கூட்டு சேர்ந்து அதிகார ரீதியில் தன்னை பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய்யாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலர் பொன். மாணிக்கவேலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என இடைநீக்கம் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி பொன். மாணிக்கவேல், யானை ராஜேந்திரன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
பொன் மாணிக்கவேலின் இணைப்பு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, யானை ராஜேந்திரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து, சிலை கடத்தல் சம்பவங்களில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற்றதாகவும், பொன் மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆதாரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய பொன். மாணிக்கவேல் தரப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.