சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 19 பேர், இரண்டு ஆண்டு பணி ஒப்பந்த அடிப்படையில் குவைத்திற்கு பணிபுரிய 'அமோசா டிராவல்ஸ்' மூலம் சென்று உள்ளனர். ஏறத்தாழ 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தி, உணவு தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும், இந்திய பண மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி வெளிநாட்டு வேலை மோகத்தில் சென்று உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஒரு ஆண்டு காலம் தொடர்ந்து வேலை செய்து வந்த நிலையில், தங்குமிடம் உணவு வழங்கப்படாமல் பணியினை தொடர வேண்டுமானால் விசாவை புதுப்பிக்க 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என அவர்களிடம் முகவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது. சம்பளமும் பேசியவாறு வழங்காமல் மிகக் குறைந்த அளவில் வழங்கியதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதனால் குவைத்தில் இருந்து பணியினை தொடர முடியாமல் சொந்த நாட்டிற்கு திரும்பி செல்கிறோம் எனக் கூறிய போது பாஸ்போர்ட்டை திருப்பி தர 60 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என குவைத்தில் பணி வழங்கிய தனியார் நிறுவனமான 'பியூச்சர் சர்வீஸ்' நிறுவனம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் தமிழ்நாட்டிற்கு வர முடியாமல் பணியாளர்கள் தவித்து உள்ளனர். மேலும் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு போதிய பணம் இல்லாமல் சிக்கித் தவித்த நிலையில் இந்திய தூதரகத்தை அணுகி உள்ளனர். இதையடுத்து வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையின் முயற்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 19 நபர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.
மேலும் இது போன்று பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் ஏஜென்சிகள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஏற்கனவே இது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்ட ஏஜென்சி நிறுவனங்களுக்கு குண்டர் சட்டம் வரை போடப்பட்டுள்ளது என்றும் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
தொடர்ந்து, இது குறித்து பேசிய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன், "ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மட்டும் நாங்கள் 10 பேர் வேலைக்கு சென்றோம். அங்கு ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு பிறகு குவைத்தில் பணியாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். மேலும் இந்திய தூதரகத்திலும் முறையிட்டோம். அதன் அடிப்படையில் தமிழக அரசு எங்களை மீட்டு தமிழகம் அழைத்து வந்தது" என்று தெரிவித்தார்.
மேலும் அரியலூர் மாட்டத்தைச் சேர்ந்த தங்க பிரகாஷ் கூறுகையில், "எங்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப தமிழக அரசு வேலை வாயிப்பினை வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.
இதையும் படிங்க: 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படுமா? - வெளியான முக்கிய அப்டேட்!