சென்னை: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "காவிரியில் இருந்து தமிழகத்துக்கு இம்மாதம் 30ஆம் தேதி வரை, வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.மேலும் நாளை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு 16,000 கன அடி நீர் தர வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப் போகிறோம்" என்று கூறினார்.
பின்னர் என்ன காரணத்தால் 3,000 கன அடிநீர் திறக்க பரிந்துரைக்கப்படுகிறது? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "கடந்த மாதம் 15 நாட்களுக்கு 3000 கன அடி நீர் கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே நிர்ணயிக்கபட்டது. அப்படி கொடுக்கபட்டதால் தான் தமிழகத்திற்கு 4,664 கன அடி நீர் வந்துள்ளது.
இருப்பினும் தமிழகத்திற்கு தண்ணீர் இன்னும் வரவேண்டி உள்ளதால், நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் தமிழகத்திற்கு கூடுதலாக 16,000 கன அடி நீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்க இருக்கிறோம். காவிரி நீருக்காக தொடர்ந்து போராடி கொண்டு தான் இருக்கிறோம்" என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டத்தில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு, 3000 கன அடி நீர் திறந்தவிட பரிந்துரை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து 88வது கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் இரு மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் காணொளி வாயிலாக பங்கேற்றனர். அதில் இரு மாநில அதிகாரிகளும், இரு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையும், அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும் முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினித்குப்தா, தமிழகத்தில் நெல் சாகுபடிக்காக அடுத்த 15 நாட்களுக்கு, அதாவது அக்டோபர் 16ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை விநாடிக்கு 3000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என பரிந்துரை செய்து, அதை பில்லிகுண்டுலு சோதனை நிலையத்தில் தண்ணீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.