சென்னை: மாநகராட்சி கட்டுப்பாட்டில் தற்போது 119 ஆரம்ப பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 32 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளான மணலி, மாதவரம், திருவொற்றியூர், அம்பத்தூர், வளசரவாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட மண்டலங்களில் 139 அரசுப் பள்ளிகளை எடுத்து நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
இந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த ஆணையில், "சென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்னை மாநகராட்சியுடன் இணைந்த பகுதியில் உள்ள பள்ளிகளை, மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஆணையர் கேட்டுக் கொண்டிருந்தார்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து, சென்னை மாநகராட்சியின் நிர்வாகம் மற்றும் சென்னை முதன்மை கல்வி அலுவலர் நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிகள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியவற்றை சேர்க்க கோரி கருத்துகள் பெறப்பட்டன. அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் சேர்க்கப்பட்ட பகுதிகளில் (காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திருவள்ளூர்) உள்ள 790 பள்ளிகளில் சென்னையை சுற்றி இருக்கும் மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டத்தில் ஒரு பள்ளி உள்ளிட்ட 139 பள்ளிகள் மட்டுமே சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இந்த 139 பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் முதுகலை அரசுப் பணியாளர் பணி விதிச் சட்டம் 2016-ன் படி சென்னை மாநகராட்சி பணியில் சேர விரும்பினால் அவ்வாறே தொடரலாம். பள்ளிக்கல்வித்துறையிலே பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறையில் அவ்வப்போது ஏற்படும் காலியிடங்களில் மூன்று ஆண்டுக்குள் முன்னுரிமை அடிப்படையில் நிர்வாக மாறுதல் பெற்றுச் செல்லலாம். அதுவரை சம்பந்தப்பட்ட பள்ளியிலே ஆசிரியராக பணியை தொடரலாம்.
மூன்று ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து எந்தவித விருப்பமும் தெரிவிக்காமல் தொடர்ந்து பணி புரிபவர்கள் சென்னை மாநகராட்சியில் சேர்ந்து கொள்ளலாம். 139 பள்ளிகள் மட்டுமே சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. மீதமுள்ள 651 பிற துறை பள்ளிகள், அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகள் ஏற்கனவே இருந்தவாறு பள்ளிக்கல்வித்துறையின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்கப்பட்ட நான்கு கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளை பார்வையிடவும், பயிற்சிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் இணைப்பில் உள்ள வட்டாரத்திற்கு உட்பட்ட வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களை சென்னை வருவாய் மாவட்டத்திற்குள் பணிபுரிய அனுமதி அளிக்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.