சென்னை: திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்டேவியாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், "நாடு முழுவதும் 2022-23ஆம் கல்வியாண்டில் எம்டி, எம்எஸ், டிஎன்பி ஆகிய படிப்புகளில் சிறப்பு சுற்று முடிந்தும் 1,311 முதுகலை மருத்துவ இடங்கள் காலியாக உள்ளன.
மகாராஷ்டிராவில் 325, கர்நாடகாவில் 268, தமிழ்நாட்டில் 100, ராஜஸ்தானில் 74 , மத்தியப்பிரதேசத்தில் 58, மேற்கு வங்கத்தில் 55, உத்திரப்பிரதேசத்தில் 52, ஒடிஷாவில் 43, தெலுங்கானாவில் 36, குஜராத்தில் 33, டெல்லி மற்றும் ஹரியானாவில் தலா 31, அசாம் மற்றும் பீகாரில் தலா 28, ஆந்திரா மற்றும் ஜம்முகாஷ்மீரில் தலா 25, சத்தீஷ்கரில் 23, பஞ்சாபில் 19, புதுச்சேரியில் 27, உத்தரகாண்ட் மற்றும் திரிபுராவில் தலா 8, ஹிமாச்சல பிரதேசத்தில் 7, சண்டிகர், கோவா, கேரளாவில் தலா 4, ஜார்க்கண்டில் 3, மேகாலயா மற்றும் மணிப்பூரில் தலா 1 என மொத்தம் 1,311 இடங்கள் காலியாக உள்ளன.
இது நீட் கலந்தாய்வு முறையின் மோசமான தன்மையையும், நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளையும், மருத்துவ இடங்களை கையாள்வதில் சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் மெத்தனமாக நடந்து கொள்ளும் விதத்தையும் அம்பலப்படுத்துகிறது. ஒவ்வொரு முதுகலை மருத்துவ இடமும் நாட்டின் தேசிய சொத்தாகும். சிறப்பு இடங்களை நிரப்புவதில் ஏற்பட்டுள்ள கலந்தாய்வு முறையின் குளறுபடிகளால், இவை வீணடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறி தகுதியின் அடிப்படையில் பெறப்பட்ட இடங்கள் இடஒதுக்கீட்டில் கணக்கிடப்படுவதால் பல தகுதி வாய்ந்த ஏழை, எளியவர்களுக்கு கலந்தாய்வு நடைமுறையில் நியாயமான முறையில் நடத்தப்படுவதில்லை.
இது குறித்து ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளேன். மேலும், இந்த காலியிடங்களுக்கான தேதிகள் அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டதால், மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு கலந்தாய்வின்போதும் கவுன்சிலிங், காலிப்பணியிடங்கள் போன்றவற்றின் கால அவகாசத்தை நீட்டிக்க உச்ச நீதிமன்றத்தை அணுகுவதில் நிறைய குழப்பங்களும் தாமதங்களும் ஏற்படுவதால் மத்திய சுகாதார சேவைகள் இயக்குநரகம் (DGHS) முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும். மெத்தனமாகவும், பொறுப்பற்ற முறையிலும், திறமையின்றியும் செயல்படும் சம்பந்தப்பட்ட DGHS அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
Dar-us-salaam கல்வி அறக்கட்டளை மற்றும் பலர் VS இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் பலர் இடையிலான வழக்கு wp (c) 267 இன் 2017-இன் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, வழக்கமான கவுன்சிலிங்கிற்குப் பிறகும் மீதமுள்ள காலியிடங்கள், சிறப்பு காலியிடங்களுக்கான தனி கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட வேண்டும். இந்த ஆண்டு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் மத்திய நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான சிறப்பு காலியிடங்களின் கலந்தாய்வு சுற்றுகள் 14.1.2023 வரை நீட்டிக்கப்படுவதாக 2.1.2023 அன்று அறிவிக்கப்பட்டது, மாநில ஒதுக்கீட்டு இடங்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்த குழப்பமானது நூற்றுக்கணக்கான மாநில ஒதுக்கீட்டு இடங்கள் வீணாவதற்கு வழிவகுத்தது. மேலும் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 10.1.2023 அன்று வெளியிடப்பட்டு 14.1.2023 வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக உரிய கால அவகாசம் வழங்கப்படாத காரணத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. எனவே 2022-23ஆம் கல்வியாண்டில் நாடு முழுவதும் சுமார் 1,311 முதுகலை இடங்கள் அந்தந்த மாநிலங்களின் கலந்தாய்வுக் குழுக்களால் நிரப்பப்படவில்லை.
தகுதிவாய்ந்த மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறை உள்ளது. இதை நிவர்த்தி செய்ய மருத்துவர்களுக்கு கல்வியளித்தல் மற்றும் பயிற்சியளித்தல் ஆகியவற்றில் மருத்துவ நிறுவனங்கள் முழு திறனுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் அவற்றின் சிறப்பு தேசிய நலனுக்கானது என்பதால், அவர்கள் தங்கள் துறையில் சிறந்து விளங்க தேவையான தளத்தை வழங்க வேண்டும். உச்ச நீதிமன்றமானது, முதுகலை மருத்துவ இடங்கள் என்பது மதிப்புமிக்க சொத்து என்று தெளிவாக கூறியுள்ளது. முதுநிலைப் படிப்பில் தகுதியான மாணவர்களைச் சேர்ப்பதற்கான கால அவகாசத்திற்குள் DGHS மற்றும் கலந்தாய்வு குழுக்கள் செயல்படத் தவறியதால், கணிசமான அளவு பணம் மற்றும் நேரத்தை செலவழித்து கடினமாகப் படித்த, மாணவர்களை ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
2022-23ஆம் கல்வியாண்டில் விடுபட்டுள்ள இந்த 1,311 காலி இடங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கவும், இந்த முதுநிலை மருத்துவ இடங்களை முழுமையாகப் பயன்படுத்தவும் டிஜிஎச்எஸ் அமைப்பிற்கு உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அரசின் திட்டங்களை ஆசிரியர்கள் மாணவர்களிடம் எடுத்து கூற வேண்டும்: அமைச்சர் பொன்முடி