தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜன.13) போகிப்பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. 'பழையன கழிதலும்; புதியன புகுதலும்' என்ற சொல்லிற்கேற்ப பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள பழைய துணிகள் உள்பட பல பொருட்களை சாலையில் போட்டு எரித்து வருகின்றனர்.
போகிப் பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்திருந்தும், பொதுமக்கள் தொடர்ந்து இன்று(ஜனவரி 13) அதிகாலை முதல் பழைய பொருட்களை எரித்து வருவதால், சென்னை புறநகர் முழுவதும் புகைமூட்டமாக உள்ளது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் போகிப்பண்டிகை புகையால் ஏற்பட்ட புகைமூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக சென்னைக்கு வரும் பெங்களூரு, ஹைதராபாத், மும்பை ஆகிய 12 விமானங்களுக்கு அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் பாதிப்பு அடையவில்லை என்றும், இதுவரை எந்த விமானமும் ரத்தாகவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: உள்ளம் துள்ளும் சேலம் வெல்லம்! உச்சத்தில் விற்பனை!