சென்னை: அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "11- ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலை 20 ந் தேதி மதியம் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தேர்வர்கள் இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து 21 ந் தேதி மதியம் 12 மணி முதல் 25 ந் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தை அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்"என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சான்றிதழ் இழந்த பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்