11, 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு குறித்து அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி கூறியதாவது, "இந்தாண்டு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களும் புதிய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத உள்ளனர்.
புதிய பாடத்திட்டம் செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்னர், பழைய பாடத்திட்டத்தில் படித்தவர்கள் இந்தாண்டு தேர்வினை எழுத உள்ளனர். அவர்களுக்குப் பழைய பாடத்திட்டத்தில் கேள்வித்தாள் அளிக்கப்படவுள்ளது. அவர்களுக்குரிய கேள்வித்தாள்கள் சரியாக அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தனியாகத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் தனித்தேர்வர்களாகப் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதும் மாணவர்களின் விவரங்கள் அடங்கிய முதல் பக்கம் எனப்படும் முகப்புச் சீட்டு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிங்க் நிறத்திலும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நீலம் நிறத்திலும் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்குத் தனியாக தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்தாண்டு புதிய பாடத்திட்டத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத பாடங்களில் மறுதேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, மஞ்சள் நிறத்தில் முகப்புச் சீட்டு அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன. இந்த மாணவர்களும், பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதும் மையத்திலேயே பொதுத்தேர்வினை எழுதலாம்.
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி முடிவடைகிறது. இத்தேர்வினை எழுதவுள்ள மாணவர்களுக்கான வினாத்தாள்களை, அரசுத் தேர்வுத் துறையால் பாதுகாப்பாக வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வினை சரியாக நடத்துவதற்கான வழிமுறைகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன" எனக் கூறினார்.
இதையும் படிங்க: தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி மாணவர்கள் போராட்டம்